பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 9

 அன்னக்குஞ்சுகள் அயர்ந்துறங்க, அக்குளத்தில் உள்ள பச்சைத் தேரைகள் தாராட்டுகின்றன.

சேலுண்ட ஒண்க ணாரின் திரிகின்ற செங்கால் அன்னம்
மாலுண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை
காலுண்ட சேற்று மேதி கன்றுள்ளி கனைப்பச் சோர்ந்த
பாலுண்டு துயிலப் பச்சைத் தேரைதா ராட்டும் பண்ணை

(கம்பன்- 44)

(சேல் மீன் போன்ற ஒளியுடைக் கண்களையுடைய பெண்களைப் போன்று திரிகின்ற சிவந்த காலையுடைய அன்னம் தாமரையில் பொரித்துவிட்ட குஞ்சு, தன் கன்றை நினைந்த எருமை சொரிந்த பாலை உண்டுவிட்டு உறங்க, அத்தாமரையினருகிலுள்ள தேரை தாலாட்டுவது போலக் கத்துகிறது.)

தாமரைப்பூ காற்றில் அசையும்பொழுது அதில் அன்னம் இருந்து உறங்குவதைத் திருத்தக்க தேவர் தமது சிந்தாமணியில் அழகாகக் கூறுகிறார்:

தாய்தன் கையில் மெல்லத் தண்என் குறங்கின் எறிய
ஆய்பொன் அமளித் துஞ்சும் அணியார் குழவி போலத் தோயும்
திரைகள் அலைப்பத் தோடார் கமலப் பள்ளி
மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்மின்!

(சீவகம்- 935)

இதே கருத்தைக் கம்பநாடன் இன்னும் அழகுபடுத்திக் கூறிய சிறப்பைக் கண்டோம். தேரை அன்னக் குஞ்சுக்குச் செய்யும் உபகாரத்தைக் கண்டோம். ஆனால், தேரை தன் கூடவே குளத்தில் வாழும் அன்னக்குஞ்சுக்கு உபகாரம் செய்வது பெரிய சிறப்பன்று. முன்பின் தெரியாதவர்கட்கு உபகாரம் செய்வதையே பெரியோர்கள் பாராட்டுவார்கள்.