பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 ◌ அ. ச. ஞானசம்பந்தன்

 மீன்களின் களிப்பு

கடலில் இருக்கின்ற மீன்கள் உப்புச் சுவையை அன்றி வேறு ஒன்றையும் அறியாதவை. சுவைகளிற் சிறந்த இனிப்பை அவை எவ்வாறு அனுபவிக்க இயலும்? என்றாலும், கோசல நாட்டில் உள்ள மரங்களும் கரும்புகளும் கடல் மீன்கட்கு இனிப்புச் சுவையை ஊட்டக் கருதி என்ன செய்கின்றன தெரியுமா? கரும்பின் சுவை ஒரு வகை. இனிமை; பாளையில் வருகின்ற கள்ளின் சுவை வேறொரு வகை இனிமை; பழரசங்களில் வருகின்ற சுவை மற்றொரு வகை இனிமை, நேரே தேன் கூட்டிலிருந்து கிடைக்கும் தேனின் சுவை இன்னொரு வகை இனிமை, மலர்களிலிருந்து வரும் தேனின் சுவை பிறிதொரு வகை. இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து கடலில் சென்று பாய்ந்த உடனே கடல் மீன்கள் தம் வாணாளிலே கிடைக்காத இத்தேனை உண்டு, சற்று வெறிபிடித்து ஆடின. இக் காட்சியையும் கவிஞன் நமக்குக் காட்டுகிறான்.

ஆலைவாய்க் கரும்பின் தேனும் அரிதலைப் பாளைத் தேனும்
சோலைவாய்க் கனியின் தேனும் தொடை இழி இறாலின் தேனும்
மாலைவாய் உகுத்த தேனும் வரம்புஇகந்து ஓடி
வங்க வேலைவாய் மடுப்ப உண்டு மீனெலாம் களிக்கும் மாதோ

(கம்பன் - 40).

(அரிதலை- அரிந்த நுனி, தொடை இழி இறால்- ஒழுங்காக ஒழுகும் தேன்கூடு, வங்கம்- கப்பல்.)

கோசல நாட்டின் இயற்கை வளத்தையும், விலங்குகளின் பண்பாட்டையும் ஒருவாறு கண்டோம்: இனி இத்தகைய நாட்டில் வாழும் மக்கள் வளத்தைக் காண்போம்