பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 அ. ச. ஞானசம்பந்தன்

 பயன்படுதல் கூடும் என்பதற்காகவே வள்ளுவர், “செய்க பொருளை; செறுகர் செறுக்கு அறுக்கும் எஃகு அதனிற் கூரியது இல்” (759) என்று ஒரு குறளில் கட்டளை இட்டுவிட்டு, மற்றொரு குறளில், “பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள” (241) என்று கூறினார். செல்வம் படைத்தவர் அனைவரும் செம்மையான வாழ்க்கை வாழ்வதாய் இருப்பின், 'திருவேறு; தெள்ளிய ராதலும் வேறு' (374) என்று ஏன் திருக்குறள் பேசுகிறது? தெள்ளிய அறிவினையுடையார் செல்வம் பெறாமல் வருந்துதலும் அறிவிற்குறைந்தார் பெரும் பொருள் படைத்திருப்பதும் இன்றும் நாம் காணும் அனுபவம். ஆகவே, செல்வம் மிகுந்த நாட்டில் வாழும் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை விவரமாகக் குறிக்க வேண்டிய கடப்பாடு கவிஞனுக்கு ஏற்பட்டு விடுகிறது. இந்த அடிப்படையில் கம்பன் கண்ட கோசல மக்களைச் சற்று பார்ப்போம்.

கோசல நாடா, தமிழ் நாடா ?

இப்பொழுது நாம் நுழைந்திருப்பது கோசல நாடு. இந்த நாட்டில் எந்த ஊருக்குள் நுழைந்தாலும் சில பொதுப் பண்பாடுகளைப் பார்க்கலாம். இந்த ஊருக்குள் நுழையும்போதே இனிய இசை வந்து காதில் விழுகிறதல்லவா? இத்தகைய இசையைக் கோசலநாடு முழுவதுமே கேட்கலாம். கின்னரர், கிம்புருடர் என்று தேவலோகத்தில் இசையாளர்கள் வாழ்கின்றார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போலக் கோசல நாட்டிலும் ஒரு கூட்டத்தார் உண்டு. அவர் சீறியாழ்ப்பாணர் எனப்படுவர். உலகத்தில் மக்களாய்ப் பிறந்த யாவருக்கும் கவலை என்பது பொதுச்சொத்து. ஆனால், ஒருசில அதிட்டசாலிகள், யாவருக்கும் பொதுவான இக்கவலையைத் தாங்கள் பங்கிட்டுக் கொள்வதில்லை; அதற்கு மறுதலையான மகிழ்ச்சியில் என்றுமே திளைக்கிறவர்கள். அவர்கள் மகிழ்ச்சியின் அறிகுறியாக ஓயாது பாடிக் கொண்