பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 15

 கூடக் கோசல மக்கள் காட்டும் மன நிலையைச் சற்று கவனித்துப் பார்க்க வேண்டும். அவர்களுடைய அனுபவ முதிர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகும் இந்த இடங்கள்.

இளையவர் பந்தாடுமிடம் சண்பகவனமே அன்றிச் சந்தனவனமல்லவாம்; ஏன்? சந்தனவனத்தில் வண்டுகள் நிரம்பியிருக்கும், மகளிர் பந்தினை எறிந்து பிடிக்கும் போது பந்தினை நோக்கும் கண்களைத் தங்கள் துணையோ என எண்ணி வண்டுகள் அணைய வரும். உடனே கண்ணிமைகள் மூடிக்கொண்டு விட, பந்தைப் பிடிப்பதில் பிழை நேர்ந்துவிடுகின்றது. எனவே, வண்டுறா மலர்ச் சோலையாகிய சண்பக வனங்களுக்கே மகளிர் பந்தாடச் செல்வது வழக்கம் அங்கு. அங்ங்ணமே இளங்குமரர்களும் தாங்கள் போர்க்கலை முதலிய கலைகளைப் பயில்கின்ற இடம் மணம் பரந்த ஊர்ப்புறவமேயன்றி நந்தனவனமல்லவாம். நந்தனவனத்தில் ஊராரும், மற்றாரும் வந்து கூடுவர். அதனால், தங்கள் பயிற்சிக்கு தடை விளையக்கூடும். எனவே, ஊருக்கு அடுத்த முல்லைக் காடுகளிலேதான் காளையர் போர்ப்பயிற்சி செய்வார்கள். இதனைக் கவிஞன் அழகாக எடுத்துக் காட்டுகிறான், இப்பாடலின் மூலம்:

பந்தினை இளையவர் பயில்இடம் மயில்ஊர்
கந்தனை அனையவர் கலைதெரி கழகம்
சந்தன வனம்அல, சண்பக வனமாம்;
நந்தன வனம்அல, நறைவிரி புறவம்.

(கம்பன்- 79)

பொழுது போக்கு

மக்கள் வாழ்க்கையைப் பார்க்கப் புறப்பட்ட நாம் அவர்கள் விளையாடும் இடங்களை ஏன் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? அதிலும் ஒரு கருத்து இருக்கிறது. ஒரு நாட்டில் உள்ள