பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 அ. ச. ஞானசம்பந்தன்


இதனால், முன்னர்க் கூறிய ‘கலைதெரி கழகத்’திற்கும் இதற்கும் உள்ள வேறுபாடு நன்கு தெளிவாகிறதன்றோ?

போர் செய்வதில் இத்துணை விருப்பம் உடையவர்களாய் இவர்கள் இருந்தார்கள் என்றால், வாழ்க்கையில் எவ்விதம் வாழ்ந்தார்கள் என்ற ஐயம் எழத்தானே செய்யும்? போர் செய்வதால் வாழ்க்கையின் இனிய பகுதிகளை அறியாதவர்கள் என்று எங்கே நாம் நினைத்து விடப் போகிறோமா எனக் கருதிக் கவிஞன் அடுத்த பாடலில் இன்னுஞ்சில வகை மக்களைப் பற்றிப் பேசுகிறான். இவர்கள் எல்லா நாட்டிலும், எல்லாக் காலத்திலும் இருப்பவர்கள்; வாழ்க்கையில் இன்பம் ஒன்றையே நாடுபவர்கள். இவர்கள், பழுமரம் தேரும் பறவை போல, எது வரினும் வருக! அன்றி, எது போகினும் போக! இன்பம் மாறாத வாழ்வு ஒன்று மாத்திரம் எமக்கருளல் வேண்டும்”, என்று வாழ்பவர்கள்.

உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வகை மக்கள் எல்லா நாட்டிலும், எக்காலத்திலும் உள்ளார்கள். உழைப்பு என்பது இவர்கள் அறியாத ஒன்று. உழைக் கின்றவர்கள், ஐயோ! பொழுது போதவில்லையே கடமையைச் செய்து முடிக்க!' என்று வருந்துகிறார்கள். ஆனால், இவ்வகை மக்கள், 'ஐயோ! பொழுது போக வில்லையே!' என்று கவலை கொள்ளுகிறார்கள்.

நாள் எனும் வாள்

இரு சாராருக்கும் பொழுது என்பது ஒன்றாயினும், அவரவர் மன நிலைக்கு ஏற்பவும் அது காட்சியளிக்கிறது.

இத்தகைய மக்கள் இருப்பதனாலன்றோ வள்ளுவர், “நாள் என ஒன்று போல் காட்டி உயிர்ஈரும் வாள்” என்று கூறி விட்டுவிடாமல் ‘அஃதுணர்வார்ப் பெறின்’ (குறள் 334) என்றும் கூறினார்? 'ஒரு நாள் என்பது, நம் வாழ்நாளின் ஒரு பகுதியை வெட்டி எடுக்கிற வாளாயுதம்