பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 23

 என்று புறநானூற்றுப் பாடலில் இப்புதிருக்கு விடை கூறுகிறார் அப்புலமைப் பிராட்டியார். நாடாக இருப்பினும் காடாக இருப்பினும், பள்ளமாக இருப்பினும் மேடாக இருப்பினும் கவலை இல்லை. எங்கே மக்கள் நல்லவர்களாய் இருக்கிறார்களோ, அங்கேதான் நாடும் நல்ல நாடு என்று கூறப்படும், என்பதே இப்பாடலின் பொருள். நாடு நல்லது என்று கூறும்பொழுது நாட்டில் உள்ள மக்களையே சொல்வோனும் குறிக்கிறான்; கேட்போனும் அறிகிறான். இதனால் பண்டைக் காலத்திலேயே ஒரு நாட்டின் சிறப்பு அங்கு வாழும் மக்களைப் பொறுத்தது என்பதைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர் என்று கருதலாம்.

நல்லவர் யார்?

'நல்லவர் என்ற மொழியை மக்கள் எங்ங்னம் பெறுகின்றார்கள்? நல்லவர்' என்று குறிக்கும் பொழுது பண்புடைமை என்னும் நன்மையைத்தான் குறிப்பிடுகிறோமே தவிர, அறிவுடைமை, ஆராய்ச்சித் திறன், செயலாற்றும் திறன் முதலியவற்றைக் குறிப்பிடவில்லை. நன்மை வேறு; இவ்வியல்புகள் வேறு. நன்மை உள்ளவிடத்தில் இவ்வியல்புகள் இருக்கும் என்றோ, அன்றி இவ்வியல்புகள் இருக்கும் இடத்தில் நன்மை இருக்கும் என்றோ கூறுவதற்கில்லை. 'பண்புடைமை, சான்றாண்மை என்று வள்ளுவர் குறிக்கும் இயல்புகளையே இங்கு நன்மை' என்று குறிப்பிடுகிறோம். ஒரு நாட்டில் மக்கள் மிக்க அறிஞர்களாய் இருக்கலாம். அதனால் அந்நாடு சிறந்தது என்று கூறும் மரபு தமிழரிடம் இல்லை. அறிஞர்கள் நிறைந்த நாட்டில் மக்கள் சமுதாயம் நன்கு வாழ வழி வகுக்கப்பட்டால், அதை நல்ல நாடு என்று கூறுகிறோம். அதற்கு மறுதலையாக அங்கு அணுக்குண்டும் ஹைட்ரஜன் குண்டும் தோன்றினால், அதனை உண்டாக்கியவர்களை நல்லவர்கள் என்று கூற முடியுமா? அறிவும் ஆற்றலும் வேறு: