பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 அ. ச. ஞானசம்பந்தன்

 பண்பாடு என்பது வேறு. மக்கட் சமுதாயம் இன்றைய நிலையில் அறிவு வேட்டையில் இறங்கியுள்ளதே தவிரப் பண்பாட்டைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. இவ்வாறு கூறுவதால், மக்களுக்கு அறிவு தேவையில்லை என்று நினைத்துவிட வேண்டா. அறிவு தேவைதான். ஆனால், பண்பாட்டுடன் கலவாத அறிவு நன்மை விளைக்காது. மனிதனுக்கு எல்லா உறுப்புக்களும் உரம் பெற்றிருக்க வேண்டும். சிறப்பாகக் குத்துச் சண்டை செய்பவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களுடைய முன் கைகள்தாம் பயன்படுகின்றன. அதனால் ஏனைய உறுப்புக்களை நன்கு வளர்க்காத ஒருவன் இத்தொழிலில் ஈடுபட இயலுமா? இத்தொழிலை நன்கு அறிந்தவர் இஃது இயலாதென்பதை நன்கு அறிவர். அதேபோல, மனிதன் முழு வளர்ச்சியடைய வேண்டுமாயின், அறிவு, பண்பாடு என்ற இரண்டும் வளர வேண்டும். இவ்விரண்டனுள் பண்பாடில்லாத அறிவு வளர்ச்சி தன்னைத் தானே அழித்துக் கொள்ளும்; அறிவில்லாத பண்பாடு நீண்ட நாள் நிலைத்து வாழ முடியாது எனினும், மக்கட் சமுதாயத்திற்கு மிகுதியும் வேண்டப்படுவது எது?” என்றால், பண்பாடு என்று உடனே கூறிவிடலாம்.

பண்புடையாரே நல்லார்

அறிவின் அவசியத்தை அறியாதவரல்லர் வள்ளுவப் பெருந்தகையார். அவர் இரண்டு குறள்களில் அறிவின் இலக்கணத்தையும் அதன் இன்றியமையாமையையும் கூறினார். ஆனால், இறுதியில், இவ்வுலகின் நிலை பேற்றுக்குக் காரணம் யாது?’ என்ற வினாவை எழுப்புகிறார். ஆம்! உலகம் நிலை பெறுவது அறிவாற்றலாலா, அன்றிப் பண்பாட்டாலா? ஒருமுகமாக விடை கூறுகிறார் ஆசிரியர்.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம், அஃதின்றேல் மண்புக்கு மாய்வது மன்

(996)