பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 25

 என்ற குறளில் உலகம் நிலை பெறுவது பண்புடையாளராலேயே என்று விடை கூறிவிட்டார்.

இப்பேருண்மையை நன்கு அறிந்த கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன் தான் கனவு கண்ட நாட்டில் மக்களைப் படைக்கையில் இவ்வியல்பை மறவாமல் பேசுகிறான்; ஆம்! கோசல மக்கள் பண்பாட்டில் சிறந்தவர்கள் என்றே கூறுகிறான். இப்பண்பாட்டை எவ்வாறு பெற்றார்கள் அவர்கள்? கல்வி, பண்பாட்டை வளர்க்குமா? கல்வி செம்மையானதாயிருப்பின், அது நிச்சயம் பண்பாட்டை மிகுவிக்கும். கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்' (சித்தர் கணம்-10) என்று தாயுமான அடிகளும், 'கற்றாரை யான் வேண்டேன்' (திருப்புலம்பல், 3) என்று மணிவாசகப் பெருந்தகையுங் கூறியவை நம் மனக்கண் முன்னர் வருகின்றன. ஆனால், இவர்கள் அவ்வாறு கூறக் காரணம் யாது? தாயுமான அடிகளே அக்காரணத்தை அடுத்த அடியில் விளக்கிவிடுகிறார்: கற்றும் அறிவில்லாத என் கன்மத்தை என்சொல்வேன்!” என்று அவர் கூறும் பொழுது காரணம் விளங்கிவிடுகின்றது. கல்வியின் பயனாகப் பண்பாடு பெருக வேண்டும்; அவ்வாறு பெருகாதாயின், அக்கல்வி பயனற்றது என்று கூறத்தேவை இல்லை. ஆனால், அதற்கும் மேலாக அக்கல்வி முன்னர் உள்ள பண்பாட்டையும் கெடுக்குமானால், அக்கல்வி இருப்பதைவிட இல்லாதிருப்பதே மேல் என்று கூறத் தோன்றுகின்றதன்றோ? அது கருதியே வள்ளுவரும், 'கற்றதனாலாய பயன் என் கொல்?' என்று கேட்டார். உண்மையான கல்வி, பண்பாட்டை வளர்த்தல் வேண்டும்.

கோசல நாட்டு ஆடவரும் பெண்டிரும்

இக்கருத்துக்களை மனத்தில் பதித்துக் கொண்டு கம்பன் கூறும் கோசல நாட்டு ஆடவர் பெண்டிர் இரு பாலாரையும் பார்க்க வேண்டும். பெண்டிரை முதலில் எடுத்துக் கொள்வோம். காரணம், ஒரு நாட்டின் சமுதாய