பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை

 இந்நூலில், ஆசிரியர், கவிச்சக்கரவர்த்தி கம்பன் வாழ்ந்த காலத்தில் நாட்டின் பல்வகை வளங்களின் உயர்வைக் குறிப்பனவாக உள்ள சிறந்த பல கவிதைகளை நல்ல பொருள் விளக்கத்துடன் தருகிறார். கம்பன் காலத்தில் வாழ்ந்த மன்னர்களின் ஆட்சித் திறத்தையும், அரசியல் ஞானத்தையும், நேர்மை திறம்பா செயல்களையும் பல கவிதைகளின் வாயிலாக இந்நூலாசிரியர் நமக்குத் தருவது, நம் காலத்து அரசியலாருக்கும் ஆட்சியாளருக்கும் மிகவும் பயன் நல்கும் வகையில் அமைந்துள்ளது. குடிமக்களின் கடமைகளையும், பொறுப்புணர்ச்சிகளையும் ஆசிரியர் இந்நூலில் கம்பன் வழியில் இழையோட விட்டிருப்பது, அவருக்கே உரித்தான தனித் திறமையை நமக்குக் காட்டுகிறது.

கம்பன் கவி வண்ணம் கம்பராமாயணம் என்றால், பேராசிரியர் அ.ச.ஞாவின் அறிவுக் கருவூலம் என்றே இந்நூலைக் கூறலாம்.

நல்லதொரு கம்பன் ஆய்வு நூலை தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆசிரியர் திரு. அ. ச. ஞானசம்பந்தன் அவர்களுக்கு, கங்கை புத்தக நிலையம் என்றென்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.

கங்கை புத்தக நிலையத்தார்