பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. O அ. ச. ஞானசம்பந்தன் அறிவோம். இதனாலேயே அந்நாட்டில் அடிக்கடி போராட்டங்கள் ஏற்படுவதைப் பற்றிக் கேள்விப்படு கிறோம். ஆனால், இத்தகைய குறைபாடுகூடத் தான் கண்ட கனவு நாட்டில் இல்லை எனக் கவிஞன் கூறுகிறான். எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்த லாலே இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ (166) என்ற இப்பாடலில் அனுபவப் பொருளாகிய பெருஞ் செல்வத்தை அனைவரும் ஒருசேரப் பெற்றிருந்தனர் என்பதும், எனவே பிறர் பொருளை விரும்புவார் யாரும் இல்லை என்பதும் நன்கு விளங்குவது காண்க. எத்துணைச் செல்வம் பெற்றிருப்பினும், மனநிறைவு இல்லாதவர்களும் உண்டு. அத்தகையார் இந்நாட்டில் இல்லை என்பதை முன்னரே குறித்துவிட்டான் கவிஞன். இனி அடுத்துக் காண வேண்டுவது, இந்நாட்டின் அரசனைப் பற்றியதாகும். கோசலநாட்டு அரசியல் பரம்பரையாய் வந்த ஒன்று என்பது, முன்னரே குறிக்கப் பெற்றது. பரம்பரையாய் வரும் இதில் நன்மையும், தீமையும் உண்டு. அரசியல் நுணுக்கங்களை அறிந்: திருக்கும் வாய்ப்புப் பரம்பரை அரசியலில் உண்டு. மகன் அறிவு தந்தை அறிவு' என்ற நாலடியார் முதுமொழி இதற்கு நல்ல சான்று பகர்கிறது. ஆனால், தந்தைக்குப் பிறகு மைந்தனுக்கு அரசுரிமை வந்தே தீரும் என்ற கட்டுப்பாடு ஒரோவழித் தீமை பயத்தலும் உண்டு. எப்படியும் இச்செல்வம் தம்மை அடைந்தே தீரும் என்ற உறுதி காரணமாக அஞ்சாமல் தவறு செய்ய முற்படுபவரும் உண்டு அல்லவா? எனவே இங்குக் கூறப்பெற்ற குற்றத்தை, நீக்கிக் குணத்தை மட்டும் மேற்கொண்டு அரசியல் அமைந். 4 நாலடியார் 367.