பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 0 55 புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய சங்க இலக்கியங் களைக் கற்பவர், தமிழ் மன்னர்கள் எவ்வாறு தமிழர் களால் மதிக்கப் பெற்று வந்தார்கள் என்பதை அறிய முடியும், கரிகாற் பெருவளத்தான் என்ற பேரரசனின் வன்மையை இதோ கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் 'பட்டினப்பாலை' என்ற பாடலில் பாடுகிறார், அம்மன்னன் போர்த்திறம் காணுங்கள்: - பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர் தொடுதோல் அடியர் துடிபடக் குழீஇக் கொடுவில் எயினர் கொள்ளை உண்ட உணவில் வறுங்கூட்டு உள்ளகத் திருந்து வளைவாய்க் கூகை நண்பகல் குழறவும் அருங்கடி வைப்பின் ஆர்கவின் அழியப் பெரும்பாழ் செய்தும் அமையான் மருங்குஅற மலைஅகழ்க் குவனே கடல்துர்க் குவனே வான்வீழ்க் குவனே. - (பட்டினப்பாலை, அடி, 264-272) (பசிய கிளிகள் தங்கியிருக்கும் அரிய ஊரில் காலில் செருப்பணிந்த வீரர்கள் புகுந்து நெற்கூடுகளைக் கொள்ளை இட்டுவிட, அந்த நெல்லற்ற காலிக்கூடுகளில் கோட்டான்கள் தங்கி நடுப்பகலிலும் கூவும்படி ஊரைப் பாழடித்தும் மனம் அமைதி அடையாதவனாகி மலையைப் பறிப்பான்; கடலைத் துர்ப்பான்; வானையும் வீழ்த்துவான்.) - - இதில் உயர்வு நவிற்சியணி இருப்பினும், பண்டைத் தமிழ் மக்கள் மன்னனுடைய வன்மை பற்றி யாது கருதினார்கள் என்பதற்கு இப்பாடல் தக்கதோர் எடுத்துக் காட்டாகும். இவ்வாறு வன்மையும் படைவலிமையும் உடையவர்களாய் இவ்வரசர்கள் இருந்தமையின்,