பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 0 அ. ச. ஞானசம்பந்தன் இவர்கள் நல்வழி ஒழுகவேண்டிய கடப்பாடும் மிகுதியா யிற்று. பலமில்லாத அரசன் தவறான வழியில் சென்றால், அதனால் தீங்கடைபவர் ஒரு சிலரேயாவர். ஆனால் எல்லாவித வன்மையும் படைத்த அரசன் குடிகள் பொருட்டுத்தான் அரசாள வேண்டும் என்று நினைக்க வில்லையாயின் அதனால் விளையுங் கேடும் எல்லை யற்றதாய் முடியும், இது கருதியே ஒரு புலவர் அரசன் ஒருவனுக்கு அறிவுரை வழங்க முற்படுகிறார். கெல்லும் உயிர்அன்றே, நீரும் உயிர்அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அதனால், யான் உயிர் என்பது அறிகை வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே - (புறம், 186) என்ற இப்பாடலில் இரண்டு உண்மைகளை ஆசிரியர் குறித்துள்ளார். ஒன்று, அரசன் மக்களுக்கு உயிர் போன்றவன் என்பது; இரண்டாவது, அவ்வாறு உணர வேண்டிய கடப்பாடு சாதாரண அரசனுக்கன்று; நல்ல படை வன்மை படைத்தவனுக்கே என்பது. இவற்றுள் முதலாவதை எடுத்துக் கொள்வோம். அரசன் மக்கட்கு உயிர் போன்றவன் என்பதை வெற்று உவமையாக மட்டும் எடுத்துக் கொள்ளலாகாது. உடம்பைக் காட்டிலும் உயிர் சிறப்புடையதென்பதை யாவரும் அறிவர். அதே கருத்தைத்தான் ஆசிரியர் இங்கும் பேசுகிறார். சாதாரண மக்களைக் காட்டிலும் அரசன் சிறந்தவன். உயிரின் விருப்பம் போல உடம்பு இயங்கும் இயல்புடையது. அதே போன்று அரசன் விருப்பம் போலக் குடிகள் நடக்கக் கடமைப்பட்டவர்கள் என்ற உண்மை நினைவில் இருத்த வேண்டுவது.