பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
v


உடையார் இல்லார் நிறைந்த சமுதாயமே இருந்து வந்தது. அதன் தாக்கம்தான் கம்பனை இவை இரண்டுமற்ற ஒரு சோசியலிசச் சமுதாயத்தைக் கற்பனை செய்யுமாறு தூண்டிற்று என்ற முடிவிற்கு வந்தேன்.

அன்றியும் நாட்டுப்படலப் பகுதியில் அவன் கூறும் பந்தாடும் இடம், கலைதெரி கழகம் போன்றவை இக்கால சமூக மனவியலார் (Social Psycologist) கூறுவனவற்றை கம்பன் உணர்ந்திருந்தான் என்ற முடிவுக்கு வந்தேன். நாட்டு வளத்தைக் கற்பனை செய்கின்ற பகுதியில் கூட இக்காலச் சமூக அமைப்புச் செயல்முறை ஆகியவற்றைக் குறிப்பாக (Suggestion) கம்பன் கூறியுள்ளான் என்று நினைக்கத் தோன்றியது.

இவையனைத்தையும் கோவை கம்பன் கழகத்தார் வெளியிட்ட 1991 கம்பன் மலரில் ஒரு கட்டுரையாக எழுதினேன். அதை நாடு என்ற தலைப்பில் பிற்சேர்க்கையாகச் சேர்த்துள்ளேன். ஒரே பொருளைப் பற்றி இரண்டு கோணங்களில் நின்று ஆராய்ந்து எழுதியமையின் இவ்விரண்டு பகுதிகளிலும் பல இடங்கள் கூறியது கூறல் என்ற குற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. என்றாலும் அவை இரண்டும் வேறுபட்ட கோணங்களிலிருந்து ஆராயப்படுவன. கற்போர் இதனைப் பொறுப்பர் என்று கருதுகிறேன். ஆகவே கிட்கிந்தா காண்டத்தில் அரசியல் நெறி பற்றி இராமன் கூறும் பத்துப் பாடல்களும் இராமனுக்கு வசிட்டன் கூறிய அரசியல் தத்துவத்தின் ஒரு பாடலும் விரிவாக ஆராயப்பெற்று ‘அரசியல்’ என்ற தலைப்பில் நூலின் இறுதியில் சேர்க்கப்பெற்றுள்ளது.