பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 0 அ. ச. ஞானசம்பந்தன் ஆன்மீக வளம் தனிப்படப் பேசப் பெறவில்லை. எனவே, அதனையும் சேர்த்துச் சொல்ல விரும்பிய கவிஞன் நகரப் படலத்தின் ஆறாம் பாடலில் ஈடு இணையற்ற முறையில் இதனைச் சொல்கிறான். அருள், அறம் என்பவற்றைத் துணைக்கொண்டு, ஐந்தும் அவித்து, பொங்கு மாதவமும் ஞானமும் பெற்றவர்கள் அனைவரும் வாழ்வின் குறிக்கோள் ஆகக் கருதுவது வீடுபேறே ஆகும். கற்றோர், கல்லார், நல்லார், தீயோர், உடையார், இல்லார் ஆகிய அனைவருக்கும் புகலிடமாக அமைவது செங்கண் மால் திருவடியே ஆகும். அச்செங்கண்மாலே தன் இருப்பிடத்தை விட்டு இங்கு வந்து பிறந்து அளப்பருங் காலம் வாழ விரும்பினான் என்று கூறுமுகத்தால் குறிக்கோள் தன்மை பெற்ற நாட்டை, நகரத்தைத் தான் அமைத்த முறை சரியானது என்று காட்டுவது போலச் செங்கண்மால் வந்து வாழ்ந்த இடம் இது என்று கூறுகிறான். கடவுள் இங்கு வந்து பிறந்தான் என்று கூறாமல், கடவுளே இங்குப் பிறக்க விரும்பினான் என்று கூறும் வகையில் நாட்டு, நகரச் சிறப்பை ஒப்பற்றதாக ஆக்கிக் காட்டுகிறான், கம்பநாடன். -