பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

103



சாமரம் வீசும், கொற்றக் குடை சுற்றிவரும்; மகுடம் புனைந்து மகன் வருவான் என்று அவள் காத்திருந்தாள்; தவக் கோலத்தில் வந்து காட்சி அளித்தான் அவன்.

“இம் மாற்றத்துக்குக் காரணம் என்ன?” என்று கேட்டு அவன் மாற்றத்தை எதிர்பார்த்தாள்.

“பரதன், உன் நேய மகன், மணிமுடி புனைகின்றான்” என்றான்.

“முறையன்று; எனினும், அவனிடம் எந்தக் குறையும் இன்று. உன்னைவிடப் பரதன் நல்லவன்” என்று பாராட்டினாள்.

“தவசிகள் உறையும் காட்டுக்கு அவசியம் நான் போக வேண்டும் என்பது அடுத்த கட்டளை” என்றான்.

அதிர்ச்சி அடைந்தாள்.

“ஏழிரண்டு ஆண்டுதான்” என்று கால எல்லையைக் குறிப்பிட்டான்.

“ஆணையா? தண்டனையா? என்னால் வேறுபாடு காண இயலவில்லையே. இது வஞ்சனை, நஞ்சு அணையது; இனி உயிர் வாழேன்” என்றாள்.

ஒருகையை மற்றொரு கையால் நெறித்தாள்; பெற்ற வயிற்றைப் பிசைந்தாள்; வெய்து உயிர்த்தாள்; “மன்னன் கருணை நன்று” எனக்கூறி நகைத்தாள்; தானும் இராமலோடு செல்ல நினைத்தாள்.

“அரசனுக்கு நீ என்ன பிழை செய்தாய்? அறம் எனக்கு இல்லையோ?” என்று அலறினாள். தெய்வங்