பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

கம்பராமாயணம்



“தந்தை தசரதன் பரதனுக்குத் தந்த ஆட்சியை மற்றோர் தம்பி நான், மீட்டுத் தருகிறேன்; இதை யாரும் தடுக்க முடியாது” என்றான்.

“தவறு செய்தவன் நான்; இப்படி அவதூறு வரும் என்று தெரிந்திருந்தால் மூளையிலேயே களைந்திருப் பேன்; ஆட்சியை ஏற்க நான் ஒப்புக் கொண்டதே தவறு.”

“சால்புடன் நடந்து கொண்ட தந்தை சால்பு உடையவர்; பாசத்தோடு பரிந்து பேசிய தாய் பண்பு உடையவள்; அவர்கள் நம் பால் அன்பு கொண்டனர்; அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. எல்லாம் விதியின் செயல்” என்றான்.

“விதியா? இல்லை இது சதி; விதிக்கும் நான் ஒரு விதியாய் நிற்பேன்; சதிக்கு நான் ஒரு கதியாய் இருப்பேன்; என் வில்லின் முன் எவர் சொல்லும் நில்லாது” என்றான்.

“நீ கல்வி கற்றவன்; சாத்திரம் பயின்றவன்; பெற்றோரை எதிர்ப்பது பேதைமை யாகும்; சீற்றம் உன் ஏற்றத்தைக் கெடுக்கும்; என் சொல் கேட்டு நீ சினம் அடங்கு” என்றான் இராமன்.

“நன்மதியோடு விளங்க வேண்டியவன் நீ; நல் நீதிகளை மறுத்துப் பேசுகிறாய்; இனி எதையும் வீணாகக் கேட்டு உன்னை நீ அலட்டிக் கொள்ளாதே; நடக்க இருப்பவை இவை; எவற்றையும் நிறுத்த முடியாது; பரதன்தான் ஆட்சிக்கு உரியவன்; நீ எதிர்த்துப் புரட்சி செய்ய உனக்கு உரிமை இல்லை; அடங்கி இரு அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை நரகத்தில் சேர்க்கும்;