பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

123



அந்தக் கரையைக் கடந்து சென்றபோது அவர்கள் கல்லும் முள்ளும் கலந்த பாலை நிலத்தைக் கடக்க நேரிட்டது. காலை வைத்து நடக்க முடியவில்லை. இராமன் ஆணைக்கு அஞ்சிப் பகலவனும் பால் நிலவைப் பொழிந்தான்; தணல் வீசும் இடங்கள் தண்பொழில்களாகக் குளிர்ந்தன. கற்கள் மலரென மென்மை பெற்றன. கூரிய பற்களை உடைய புலிகள் கொலைத் தொழிலை மறந்தன. அப்பாலை நிலத்தைக் கடந்து, சித்திரகூட மலையை அடைந்தனர்.

சித்திரகூட மலை

சித்திரகூட மலை எழில்மிக்கதாய் விளங்கியது. மலையடியில் ஏலக் கொடியும், பச்சிலை மரமும் தவழ்ந்தன; சாரல் பகுதியில் யானையும் மேகமும் வேறுபாடின்றிப் படர்ந்தன; மலை உச்சியில் வருடைமான் கதிரவனின் பச்சை நிறக்குதிரைபோல் பாய்ந்தது; யானைகளை விழுங்கிய மலைப் பாம்புகளின் தோல்கள், மூங்கில்களில் சிக்கிக் கொடிச் சீலைகள்போல் காட்சி அளித்தன; சிங்கம் தாக்கிய யானைகளின் தந்தங்களிலிருந்து சிந்திய முத்துகள் சிதறிக் கிடந்தன.

பாறைகளில் வேங்கைப் பூக்கள் படர்ந்தன; சந்தனச் சோலைகள் சந்திரனைத் தொட்டுக்கொண்டு இருந்தன; கொடிச்சியர் கின்னர இசை கேட்டு மகிழ்ந்தனர்; வேடுவர் கவலைக் கிழங்கை அகழ்ந்து எடுத்தனர்; குரங்குகள் நீரைச் சொரிந்து விளையாடின; கான்யாற்றில் விண்மீனைப் போல மீன்கள் துள்ளி ஒளி செய்தன; அரம்பையர் அங்கிருந்த அருவிகளில் நீராடி ஆரவாரித்தனர்.