பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

கம்பராமாயணம்



பொன்னகை இழந்த மகளிர் புன்னகை யையும் இழந்தனர்; அகிற்புகை, ‘அடுப்புப் புகை, வேள்விப்புகை எல்லாம் புகைபிடிக்கக் கூடாது என்ற விளம்பரத்திற்கு அடிமையாகிவிட்டன.

தெய்வங்கள் அந்த நகரில் தங்காமல் தேசாந்திரம் சென்றுவிட்டன; கோயில் மணிகள் நாவசைந்து நாதம் எழுப்பவில்லை; பயிர்கள் பசுமையை இழந்து விட்டன; தான் இருப்பது அயோத்திதான் என்பதை அவனால் கண்டுகொள்ள முடியவில்லை.

நகரில் ஒவியத்தைக் காண முடிந்ததே அன்றி எந்தக் காவியத்தையும் காணமுடியவில்லை; சிலைகள் அசைவதை மக்கள் அசைவில் கண்டான். அவனுக்கு வரவேற்பே இல்லை. வாழ்த்துகள் மலரவில்லை; அவன் தேரைக் கண்டதும் மக்கள் ஒரம் கட்டினர்; ஒதுங்கி மறைந்தனர்; அந்நிய நாட்டில் அடியெடுத்து வைத்துவிட்டது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.

தசரதன் மாளிகை நோக்கிப் பரதன் தேரைச் செலுத்தினான். அரண்மனைக் கட்டடங்கள் விதவைக் கோலத்தை விரும்பி ஏற்றுக்கொண்டன. ‘தசரதனை அவன் கண்கள் துருவித்தேடின. தசரதன் கண்கள் மூடிக்கிடந்தன. இவன் வந்ததைத் தசரதன் பார்க்க இயலவில்லை. பார்வையை இழந்தான். அதற்குள் பணிப்பெண் ஒருத்தி பரதன்முன் வந்து நின்றாள்; ‘அன்னை உன்னை அழைக்கிறார்’ என்றாள்; அதற்குமேல் அவள் சொல்ல அனுமதி இல்லை.

தாயைக் காணச் சென்றான்; அங்குப் பேய் ஒன்று நின்று பேசியது.