பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

கம்பராமாயணம்



நெருப்பு பொறுப்பு அற்றது; உம்மைச் சுட்டு எரித்தால் அதற்குப் பிறகு குளிர் நிழலை யாம் எங்கே காண முடியும்? நிற்கின்ற நெடுஞ் சுவரே இளைப்பாற நினைத்தால் சாய்வதற்கு நிழல் ஏது? எம் விருப்பேற்று நீர் உயிர் வாழ வேண்டுகிறோம்” என்றனர்.

“தந்தை மறைந்ததும் ஆட்சிப் பொறுப்பு ஏற்க வேண்டிய நீவிர் காட்சிப் பொருளாக இங்கு வந்து சுற்றிக் கொண்டிருப்பது ஏன்?'என்று வினவினான் சடாயு.

அதற்கு விடையாக இராமன் அவர்கள் அடைந்த ன்னல்களை அடுக்கிக் கூறினான். சீதையை நோக்கி, அக்கோதையை அறிமுகப்படுத்தும்படி சடாயு வேண்டினான். தாடகையை வீழ்த்தியது முதல் வில்லை வளைத்து அக் கோமகளை மணந்தது வரை ஒன்று விடாமல் உரைத்தான் இராமன்.

“நாட்டைத் துறந்து நீங்கள் பட்ட பாட்டைக் கேட்டு மிகவும் வருந்துகிறேன். நீர் மீண்டும் திரும்பும் வரை விரும்பியபடி பொழுதுபோக்கிக் கொண்டு சீதை இங்குத் தங்கலாம்; அவளுக்கு எந்தவிதப் பங்கமும் ஏற்படாதவாறு காவல் காப்பேன்” என்று கூறினான்.

“அகத்தியர் அறிமுகப்படுத்திய கோதாவரி என்னும் ஆற்றங்கரையில் நீர்த்துறை ஒன்று உள்ளது. பஞ்சிலும் மெல்லிய அடிகள் உடைய சீதை தங்குதற்கு அந்தப் பஞ்சவடி என்னும் இடம் ஏற்றம் உடையது” என்றான் சடாயு. அதற்கு வழி காட்டினால் போதும் என்று அடக்கமாகக் கூறினான் இராமன்.