பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

165



“கரனும் தூஷணனும் என் குறையைக் கேட்டனர். பின் அவர்களை எதிர்த்து மாண்டுவிட்டனர்” என்றாள்;

“நீ செய்த தவறு என்ன? மூக்கும் செவியும் அறுக்க நீ செய்த பிழை யாது?” என்று கேட்டான்.

“பெண்ணால் வந்த பெரும்பிழை” என்றாள்.

“யார் அவள்?”

“கொடி போன்ற மென்மை உடைய அப் பேரழகியின் பாதம் தீண்ட இந்தப் பார் பாக்கியம் செய்தது; அவள் பேர் சீதை” என்று கூறி அவள் வடிவினை எல்லாம் பாராட்டத் தொடங்கினாள்.

“அவள் சொற்கள் காமரம் என்னும் பண்ணிலே இசைக்கும் பாடலாகும்; திருமகளும் அவளுக்குப் பணிப் பெண் ஆகும் தகுதியைப் பெறமாட்டாள்; அவள் கூந்தல் மேகத்தைப் போன்றது; பாதங்கள் செம்பஞ்சு போன்றவை; விரல்கள் பவளத்தைப் போன்றவை; வதனம் தாமரை மலரைப் போன்றது; கண்கள் கடலைப் போன்றன; “ஈசனார் கண்ணால் அநங்கன் எரிந்து அழிந்தான்” என்பது பொய்யுரை, வாசம் நாறும் கூந்தலாளைக் கண்டு அவளை அடைய முடியாமல் அவன் வெந்து தேய்ந்தான் என்பதுதான் உண்மை”.

“வேலினையும் வாளினையும் வெற்றி கொண்ட கண்ணை உடைய அழகியை ஒவியத்திலும் எழுத முடியாது; இவளைப் போன்ற பேரழகியைத் தேவர்