பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

கம்பராமாயணம்



சீதையின் நினைவு ஒருபக்கம்; மானம் ஒரு பக்கம் இரண்டில் சீதையின் நினைவே வெற்றி கொண்டது. மயிலுடைச் சாயலாளை வஞ்சித்து எயிலுடைய இலங்கையில் சிறை வைப்பதற்குமுன் தன் இதய மாகிய சிறையில் வைத்தான்; வெயிலிடை வைத்த மெழுகுபோல் அவன் உள்ளம் மென்மை உற்றது; காமநோயால் பீடிக்கப்பட்டு விரக வேதனையால் வெந்து அழிந்தான்; சீதையை அடைந்தால் தவிரத் தன் துன்பம் தீராது என்ற முடிவுக்கு வந்தான்; அமைச்சர்களை அழைத்து அவர்களுடன் கலந்து பேசினான். பின்பு ஒரு முடிவுக்கு வந்தான், தனியனாக விமானம் ஏறி ஐம்புலன்களை அடக்கித் தவ நிலையில் இருந்த மாரீசன் இருந்த இடத்தை அடைந்தான்.

மாரீசன் வதை

இராவணன் வந்து அடைந்ததும் என்னவோ என்று அச்சம் கொண்டான் மாரீசன். கரியமலை போன்ற இராவணனை எதிர் கொண்டு வரவேற்று உபசாரங்கள் செய்து “இந்த வனத்துக்கு என் இருக்கை நோக்கி வந்த கருத்து யாது?” என்று கேட்டான்.

“என்னால் இயன்ற அளவு என் உயிரைத் தாங்கிக் கொள்ள முயன்றேன். இப்போது அதுவும் முடியாமல் மனத் தளர்ச்சி கொண்டேன், என் அழகும் பெருமையும் புகழும் ஒருசேர அழிகின்றன. இதற்குக் காரணம் யாது? சொன்னால் வெட்கக் கேடுதான்.”

“வன்மை மிக்கவர் மானிடர் ஆகிவிட்டனர். உன்மருகி நாசி இழக்கும் நிலையை உண்டாக்கினர்;