பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

171



“மன்மதன் என்னைத் துளைக்கிறான்; அந்த அம்புக்கு ஆற்றாமல் உயிர் விடுவதைவிட இராமனை எதிர்த்து உயிர் விடுவது புகழைத் தரும்; சீதைதான் என் துயருக்கு மருந்து; என் வாழ்வுக்கு விருந்து; அவளை என்னிடம் சேர்ப்பிக்க வேண்டும்” என்றான்.

“ஏற்கனவே இராமன் தாடகையைக் கொன்றதற்குப் பழிதீர்க்க, மான் வடிவத்தில் தண்டக வனத்தில் இரண்டு அரக்கர்களோடு சென்றிருக்கிறேன். அந்த இருவரும் அவன் அம்புக்கு இரையானார்கள். நான் தப்பித்து வந்து விட்டேன்” என்றான்.

“வஞ்சனையால்தான் அவனை வெல்ல வேண்டும்; மாயமான் வடிவத்தில் சென்று, அப்பெண் மானை மயக்கு; பெண்ணாகிய அவளுக்குப் பொன்னிறம் மிகவும் பிடிக்கும்; நீ பொன்மானாய் உருவெடு; அவள்முன் பாய்ந்து ஒடு; அவள் இம்மானைப் பிடித்துத் தருக என்பாள்; அதை இராமனால் மீற முடியாது; அவனுக்கு ஒட்டம் காட்டு; அவன் உன்மீது அம்புவிட்டால், ‘இலக்குமணா’ ‘சீதா’ என்று அவன் குரலில் ஒலமிடு; இலக்குவன் காவல் நீங்கும்; என் ஆவல் ஒங்கும்” என்றான்.

மாரீசன் தன்னைப் பற்றிக் கவலைப்பட்டான்; மறுத்தால் இராவணன் கொன்று விடுவான்; இராமனை எதிர்த்தால் அவன் அம்புக்கு இரையாக வேண்டுவது தான்; மரணம் என்பது அவனைக் கூவி அழைப்பதை உணர்ந்தான்.