பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

கம்பராமாயணம்



நச்சுப் பொய்கையில் அகப்பட்ட மீன் தப்ப முடியாது; அந்தக் குளத்தில் இருந்தாலும் சாவு, கரையில் குதித்தாலும் சாவு; இருதலைக் கொள்ளி எறும்பு ஆனான்.

“வீரமரணம் அடைய முடியாமல் போயிற்றே” என்று வருந்தினான். ‘இராமன் அம்புக்கு இரையாவது தனக்கு உயர்வு தரும்’ என்று அமைதி கொண்டான்; வேறு வழி இல்லை; பொன்மான் உருக் கொண்டான்; அந்த நன் மானாகிய சீதைமுன் சென்றான்.

மானைக் கண்ட சீதை அதனைப் பிடித்து விளையாட விரும்பினாள்; பொன்னாலான மேனியும்; மரகத்தால் ஆகிய கால்களும் செவிகளும் புதுமையாய் இருந்தன. இலக்குவன் அதன் பொய்மையைக் கூறி விலக்கினான்; சீதை அந்த மானைப் பிடித்துத் தரும்படி இராமனிடம் வேண்டினாள்.

இராமன் மனைவியின் வேண்டுகோளை மதித்தான்; “இப்படியும் ஜீவன்கள் இருக்கலாம்; இவை அபூர்வப் பிறவிகள்” என்று விவாதித்தான்; “மானைக் காட்டுக” என்று சீதையிடம் இராமன் கூறினான்; இலக்குவனும் பின் சென்றான்; ஆசைபெற அந்த மான் விழித்தது.

இராமன் அதன் அழகைக் கண்டு வியந்தான்; “அதனால் நமக்கு என்ன ஆக வேண்டியுள்ளது” என்று இலக்குவன் கூறி மறுத்தான்; “இந்த மாய மானின் பின்னே அரக்கர் ஒளிந்து இருப்பர்” என்றும் சொல்லிப் பார்த்தான்.

இயற்கை மானாக இருந்தால் இதனைப் பிடிப்பதும், மாயமானாக இருந்தால் இதனை மடிப்பதும் என் செயல் என்று இராமன் கூறினான்.