பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

179



அடைந்தான். அங்கே சீதையை அசோக வனத்தில் அசோக மரத்தின் நிழிலில் சிறை வைத்தான். அரக்கியர் அவளைக் காவல் செய்தனர்.

இலக்குவன் சீதையைத் தனியே விட்டு வந்தோமே என்ற வருத்தம், இராமனைக் காண வில்லையே என்ற கவலை இரண்டிலும் அகப்பட்டுத் துடித்தான்.

இராமனைக் கண்டான்; அளவிலா மகிழ்ச்சி கொண்டான். இராமன் தன் தம்பியை அன்பால் தழுவிக் கொண்டான்.

“நீ ஏன் இங்கு வந்தாய்?” என்று கேட்டான்.

இலக்குவன் நடந்ததைச் சொன்னான்; தான் அங்கு வரவில்லை என்றால் சீதை நெருப்பில் விழுந்து இறந்திருப்பாள் என்பதை விளக்கினான்.

இலக்குவன் தடுத்தும் தான் மான்பின் சென்றது தவறு என்பதை இராமன் ஒப்புக் கொண்டு அதற்காக வருந்தினான். விரைவில் பர்ணசாலை திரும்புதல் வேண்டும் என்று கூறி இருவரும் வேகமாக நடந்தனர். பர்ணசாலையை அடைந்தனர்.

பஞ்சவடியில் சீதையைக் காணவில்லை. தேடி வைத்த செல்வம் வைத்த இடத்தில் இல்லாவிட்டால் எத்தகைய துன்பம் அடைவார்களோ அத்தகைய துன்பத்தை இராமன் அடைந்தான். அவன் மனம் சுழன்றது. உலகமே சுழன்று திரிவதைப்போல அவனுக்குக் காணப்பட்டது.