பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

181



போரிட்டவன் சிங்கம் போன்ற ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும் என்று கணித்தனர்.

கடலில் மத்தாக வைக்கப்பட்ட மந்தர மலையைப் போல இரத்த வெள்ளத்தில் இராமன் சடாயுவைப் பார்த்தான்; அவன் மீது இராமன் விழுந்து கதறி அழுதான்.

“தந்தையை நாட்டில் இழந்தேன்; மற்றொரு தந்தையைக் காட்டில் இழந்தேன். என்னைப் போல அபாக்கியவான் வேறு யாரும் இருக்க முடியாது”.

“'சீதைக்கும் உனக்கும் நேர்ந்த தீமைகளைத் தடுக்க முடியாத நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்? தவசிகளின் வேண்டுகோளை ஏற்று அரக்கரை அழிப்பதாக வாக்குறுதி அளித்தேன், அதனால்தான் வாழ்கிறேன். உன்னைக் கொன்ற பகைவன் உயிரோடு இருக்கிறான் என்று தெரிந்தும் போர் மேற்கொள்ளா மல் இங்கே மரம்போல் நிற்கிறேன்” என்று கூறிக் கதறினான்.

சடாயு இறக்கவில்லை; ஒரளவு உணர்ச்சி இருந்ததை அறிந்தான். சீதையை இராவணன் வலிதிற் கடத்திச் சென்றான் என்று சடாயு கூறினான்.

“மலரணிந்த வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும் எடுத்தான். ஏகுவானை எதிர்த்து நின்று ஆற்றல் கொண்டு தடுத்தனன்; என்ன செய்வது? சங்கரன் தந்த வாளால் என் சிறகுகளை வெட்டினான். இங்கு விழுந்து கிடக்கிறேன்; இது இங்கு நடந்தது” என்றான்.

இராமன் சினமும் சீற்றமும் கொண்டான். “சீதையைக் கடத்திய கொடுமையன் எங்கே சென்றான்?” என்று கேட்டான்.