பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

கம்பராமாயணம்



என்னை அனுப்பினாள்; அவள் முகத்தில் நான் எப்படி விழிக்க முடியும்?”

“போருக்கு அஞ்சி உயிர் விட்டாய், என்ற பெரும்பழி உன்னைச் சாராதா? இந்த பூதம் என்ன? இதைவிட அஞ்சத்தக்க விலங்கு வந்தாலும் நம் வாள் முன் எம்மாத்திரம்? துணிந்து எதிர்த்தால் இது செத்து மடிவது உறுதி என்று கூறிய வண்ணம் இலக்குவன் முன்னேறினான். இராமனுக்குப் புதிய உற்சாகம் தோன்றியது; விண்ணை முட்டும் அதன் தோள்களை வாள் கொண்டு வெட்டினர், அருவி பொழியும் மலைபோல் குருதி கொட்ட நின்றது.

அவ்வரக்கவடிவு ஆற்றல் இழந்து, செயல் இழந்து இராமன் பெருமையை உணர்ந்து பலவாறு துதித்தது. அடக்கமாய் இராமனை வழிபட்டது. சீதையைக் காணும் சீரிய முயற்சிக்கு உதவ எண்ணியது.

அது அரக்க உருவம் நீங்கிக் கந்தருவனாக மாறிற்று.

“நீ யார்?” என்று இலக்குவன் கேட்டான்.

“தனு என்னும் நாமம் உடையவன் நான்; ஒரு முனிவன் சாபத்தால் இக் கடைப்பட்ட அரக்கப் பிறவியை எடுத்தேன்; உங்கள் மலர்க்கை தீண்டப் பழைய வடிவம் பெற்றேன்”.

“புணை இல்லாமல் வெள்ளத்தைக் கடக்க இலயாது; அது போலத் துணையில்லாமல் நீர் உம் பகையை அடக்க முடியாது. சிவனும் போற்றத் தக்க ஆற்றல் மிக்க பூதகணங்களை இராவணன் பெற்றுள்ளான்;