பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

கம்பராமாயணம்



கிட்கிந்தா காண்டம்

கிட்கிந்தையில் இராமன்

வானத்தைப் போன்ற பரப்பும், நீல நிறமும் பம்பைப் பொய்கை பெற்றிருந்தது, அப்பொய்கையின் பூக்களும் அதில் படியும் அன்னப் பறவைகளும் சீதையின் நினைவை இராமனுக்கு மிகுதிப்படுத்தின, கயல் பிறழ்ச்சி சீதையின் கண்களை அவன் கண்முன் நிறுத்தியது; அன்னப் பறவை மின்னல் இடையாளான சீதையின் நடையைக் காட்டியது; குவளை விழித்துப் பார்த்தது; ஆம்பல் வாய் திறந்து பேசியது; களிறும், பிடியும் நீராடித் தழுவிக் கொண்டு அவர்கள் பழைய அன்பு வாழ்க்கையை நினைவுகளாகக் கொண்டு வந்து நிறுத்தின. பிடிக்கு முதலில் நீர் ஊட்டிப் பின் உண்ணும் களிற்றின் அன்புச் செயல் அவன் எதையோ இழந்துவிட்டதை எடுத்துக் காட்டியது. பிரிவுத் துயரில் அப்பொய்கைக் காட்சி அவனை ஆழ்த்திவிட்டது. நீடு நினைந்தான்; நீள்கனவுகளில் மிதந்தான். காரிகை தவிர வேறு எதுவும் அவன் கண்முன் நிற்க மறுத்துவிட்டது. தூரிகை கொண்டு எழுதாத அச்சித்திரம் அவனைச் சித்திரவதை செய்தது.

இலக்குவன் இராமனை நோக்கினான்; அவன் துன்பக் கனவுகளைக் கலைத்தான்; “பொழுதும் சாய்ந்தது. “நெடியோய்! நீராடி நிமலனை வழிபடு; நடந்ததை மறந்து, நடப்பதனை எண்ணிச் செயல்படுவோம்” என்று மென்மையாய்ச் சொல்லி, அவனைச் செயல்படுத்தினான்,