பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிட்கிந்தா காண்டம்

191



அவனும் மாலை மயக்கம் தீர்ந்து, இறைவழிபாடு செய்தான். முனிவர்தங்கியிருந்த சோலையில் ஒரு புறத்தே அவர்கள் உறைவாராயினர். மாலைக் கதிரவனும் வானத்தை இருளில் ஆழ்த்திவிட்டு மேலைக் கடலுள் ஒளிந்து கொண்டான்.

இரவு இராமனுக்குத் தனிமையைத் தந்தது; வான் உறங்கியது; வையகம் உறங்கியது; பூ ஒடுங்கின; புள் ஒடுங்கின; உயிர்கள் அனைத்தும் அயர்ந்து உறங்கின; அரவுகளும் கரவு நீங்கி அடங்கி ஒடுங்கின; விலங்குகளும் ஒய்வு கொண்டன; இராமன்மட்டும் உறங்க வில்லை; வைகல் விடிவதை எதிர்நோக்கி இருவரும் விழித்தே இருந்தனர்; விடிந்ததும் சீதையைத் தேடி மலைப் பாதைகளையும், காட்டு வழிகளையும் கடந்து சென்றனர்.

சபரி காட்டிய வழியில் அவர்கள் கால்கள் சென்றன; ருசிய முகம் என்னும் மலையை அடைந்தனர்; குரங்குகளுக்கு அரசனாகிய சுக்கிரீவன் அவர்களைக் கண்டு அஞ்சினான். மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தென்பட்டன. பகைவர் எனக் கருதிக் குகைகளில் ஒளிய முற்பட்டன; அனுமனை அழைத்துத் தான் கொண்ட அனுமானத்தை உரைத்தான்; வாலியின் ஏவலை ஏற்று வரிவில் ஏந்தி வந்த வாலிபர்களாய் இவர்கள் தென்படுகிறார்கள், துறவுக் கோலத்தில் துயர் விளைவிக்க வந்திருக்கிறார்” என்று கூறி ‘நீ சென்று ஆராய்ந்து உண்மை தெரிந்து திரும்பிவா’ என்று ஆணையிட்டான்.

பாற்கடலில் எழுந்த நஞ்சைக் கண்ட அமரர்களைப் போல வானரர் அச்சம் கொண்டனர். அவர்கள் அச்சத்தைப்