பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிட்கிந்தா காண்டம்

203



கொள்ள முடியவில்லை. “தம்பியரை நேசிப்பவன் இராமன் உடன்பிறந்த சகோதரர்களிடையே அவன் பகையை மூட்ட மாட்டான்; தன்னிகரற்ற வீரனான இராமன், ‘ஒருகுரங்கோடு நட்புக் கொண்டு அவனுக்காகப் பரிந்து துணைக்கு வருவான்’ என்று சொல்வது நம்பத்தக்கது அன்று” என்று கூறித் தாரை தடுத்தும் தயங்காது போருக்குச் சென்றான்.

இராமன், வாலியின் தோற்றத்தைக் கண்டு இலக்குவனிடம் அவனைப் பற்றிப் பெருமையாய்ப் பேசினான். இலக்குவன், ‘சுக்கிரீவன் நம்பத்தகுந்தவன் அல்லன்’ என்று எடுத்து உரைத்தான். அண்ணனையே கொல்வதற்கு நம்மை அவன் துணை தேடுகிறான் என்றால், அது துரோகம் அல்லவா? அவனை நம்புவது மண் குதிரையை நம்பி நட்டாற்றைக் கடப்பது போலத் தான் ஆகும்” என்றான்.

“தம்பியர் எல்லாம் பரதன் ஆகமுடியுமா? ஒருசில குறைகள் இருக்கத்தான் செய்யும்; அதற்காக நாம் அவனை வெறுக்க முடியாது; அவன் எப்படிப் பட்டவன் என்ற ஆராய்ச்சியா நமக்கு முக்கியம்? யார் பக்கம் நியாயம் இருக்கிறது? என்பதை வைத்துத்தான் ஒரு காரியத்தில் இறங்க வேண்டும்.

“வாலி, சுக்கிரீவனுக்கு உரிய ஆட்சியை எடுத்துக் கொண்டான்; தவறு இல்லை; அவன் மனைவியை ஏன் அவன் கைப்பற்ற வேண்டும்? எந்தத் தவறும் செய்யாத தம்பியை அவன் ஏன் விரட்டி அடிக்க வேண்டும்? வாலி தவறு உடையவன்; அவனை அழிப்பதுதான் அறம்” என்று கூறித் தெளிவுபடுத்தினான் இராமன்.