பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிட்கிந்தா காண்டம்

209



அங்கதனைத் தழுவிக் கொண்டு “நீ இனி அயர வேண்டா; நாயகன் இராமன் செய்த நல்வினைப்பயன் இது” என்றான் வாலி.

இராமனிடம் அங்கதனை அடைக்கலமாய் ஏற்று ஆதரிக்குமாறு வேண்டிக்கொண்டான் வாலி; இராமனும் அங்கதனுக்குத் தன் உடைவாளைத் தந்து அவனைப் பெருமைப் படுத்தினான்.

வாலி தன் மார்பில் பதிந்திருந்த அம்பினைப் பிடுங்கி வெளியே எடுத்தவுடன் இரத்தம் பீறிட்டுக் கொண்டு வந்தது; அவன் உயிரும் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றது; தாரை உயிரற்ற அவன் உடல்மீது விழுந்தாள்; புரண்டாள்; அழுதாள்; அரற்றினாள்.

“உன் தோளில் துயிலும் நான் இன்று, தரையில் விழுந்து துடிக்கிறேன்; உயிரும் உடம்புமாக இருந்த நாம் இனி எப்படித் தனித்துச் சாக முடியும்?'இந்த வெறும் உடம்பு, நீ இல்லாமல் எப்படி வாழும்? காலையும் மாலையும் சென்று நீ முக்கண்ணனை வழிபடுவாயே! இப்பொழுது நீ என்ன செய்வாய்? எப்படி உன்னால் வாளா இருக்க முடிகிறது? என் மெல்லிய ஆடைமீது சாயும் நீ, எப்படி வன்மையான தரையில் கிடக்கிறாய்? பொய் புகலாத புண்ணியனே! நீ என் உயிர்” என்று புகழ்ந்து பேசுவாயே! உயிரைவிட்டு உயிர் எப்படிப் போக முடியும்? அது பொய்யுரையாகி விட்டதே; உன் உள்ளத்தில் நான் உறைந்தேன் என்பது உண்மையாய் இருந்தால் இந்த அம்பு என்னையும் தாக்கி, என் உயிரையும் போக்கி இருக்க வேண்டுமல்லவா?