பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிட்கிந்தா காண்டம்

211



“நீயும் அங்கதனொடு ஒற்றுமையாய் இருந்து நல்லரசு நடத்துவாயாக; அமைச்சரையும், படைத் தலைவரையும் தக்க வகையில் பயன்படுத்திக் கடமை களைச் செய்துமுடிப்பது அறிவுடைமை ஆகும். நூல் அறிவோடு நல்லது கெட்டது அறியும் பகுத்தறிவு கொண்டு தெளிந்து, ஆட்சி செய்ய வேண்டும்; செல்வத்தைக் காத்து தக்க வழியில் செலவு செய்யச் சிந்தனை செலுத்துவாயாக! நண்பர் யார்? பகைவர் யார்? பொது நிலையில் உள்ளவர் யார்? என்று பகுத்தறிந்து செயல்பட வேண்டும்; யாரிடத்தில் எப்படிப் பேச வேண்டுமோ? அந்தப் பாங்கு அறிந்து, அவை அறிந்து பேச வேண்டும்; எளியர் என்று சொல்லி ஒருவரை இகழ்ந்தால், அதனாலும் தீமைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு; கூனியால் யான் அடைந்த தீமைகள், எனக்கு ஒரு பாடமாய் அமைந்துவிட்டன; பெண்டிரால் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு; வாலியின் இறப்ப்ைப் பார்த்தாய்: எங்களுடைய வாழ்வில் ஏற்பட்ட சரிவுகளும் பெண்களால் ஏற்பட்டவையே; நாட்டு மக்களிடத்துத் தாயினும் அன்பு செலுத்து; கண்ணோட்டம் வேண்டும். அதேசமயம் தீமை செய்பவர்களைக் களை நீக்குவதுபோலத் தண்டிப் பதற்குத் தயங்கக் கூடாது; பிறப்பும் இறப்பும் நல்வினை தீவினைகளை ஒட்டி அமைவன; எனினும், மாந்தர்க்குச் ‘சிறப்பு’ என்பது அவர்கள் சிந்தனையை ஒட்டி அமை வதாகும்; உலகைப் படைத்த பிரம்மாவாய் இருந்தாலும், அறன் அல்லதைச் செய்துவிட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது; செல்வமும் வறுமையும்கூட அவரவர் முயற்சிகளை ஒட்டியன ஆகும். முயற்சி திருவினை ஆக்கும்;