பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாலகாண்டம்

25



பிறப்பு’ என்பதற்கு இலக்கணம், இந்நால்வர் உறவில் விளக்க முற அமைந்திருந்தது. பாசம் அவர்களைப் பிணித்தது; மூத்தவன் இராமன் என்பதால் மற்றவர் அவனிடம் யாத்த அன்பும் பாசமும் காட்டி மதித்தனர். தலைமை இராமனிடம் இயல்பாக அமைந்து கிடந்தது. மக்களும் அவனை மற்றையவர்களைவிட மிகுதியாய் நேசித்தனர்.


விசுவாமித்திரர் வருகை

ஆற்றுவரியாக இயங்கிய தசரதன் வாழ்க்கை புயலையும் இடியையும் சந்திக்க நேர்ந்தது. மக்களைப் பெற்று மனைநலம் பெற்றிருந்த மன்னன், அவர்களைப் பிரியும் சூழல் உருவாகியது.

விசுவாமித்திரர் “ராஜரிஷி” என்று பாராட்டப் படுபவர்; அவர் அரசராய் இருந்தவர்; அவர் தம் அரச பதவியை விலக்கிக் கொண்டு, தவ வேள்விகளைச் செய்து, உயர்பேறுகளைப் பெற்று வந்தார். வேகமும், விவேகமும் அவர் உடன்பிறப்புகள். சினமும் சீற்றமும் அவர் நாடித் துடிப்புகள், அவர் வருகையைக் கண்டாலே மாநில அரசர்கள் நடுங்கினர்; அடுத்து என்ன நேருமோ என்று அஞ்சினர்.

பீடுநடை நடந்து ஏற்றமும் தோற்றமும் தோன்றத் தன் அவைக் களம் அணுகிய அம் முனிவரைத் தசரதன் தக்க வழிபாடுகள் கூறி வரவேற்று அமர வைத்தான். “தாங்கள் எழுந்தருளியதற்கு நாங்கள் மிக்க தவம் செய்தோம்” என்று அடக்கமாய்ப் பேசி, அன்புடன் வரவேற்றான். இருகை வேழம் என விளங்கிய தசரதன்,