பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

கம்பராமாயணம்



வந்ததையும் அவன்தான் அனுப்பி வைத்தான் என்பதை யும் கூறி இராமன் திருமேனி அழகைக் கூறினான்; அப்போது அவன் தான் ஒரு சொல்லின் செல்வன் என்பதை நிறுவினான்; கவிஞனாகவும் காட்சி அளித்தான்.

“இராமன் திருவடிகள் தாமரை போன்றும் பவழத்தைப் போன்றும் உள்ளன; கால் விரல்கள் இளஞ்சூரியனைப் போன்றன; நகங்கள் வைரத்தினும் அழகியன கணுக்கள் அம்பறாத் துணியைப் போன்றன; தொடைகள் கருடனின் கழுத்தைப் போன்றன; உந்தி மகிழ மலருக்கு ஒப்பாகும்; மார்பு திருமகன் உறையும் இடமாகும்; கைகள் ஐராவதம் என்னும் யானையின் துதிக்கை போன்றது; கை நகங்கள் அரும்பு போலக் கூர்மையன; தோள்கள் மலை போன்றன; கழுத்து திருமாலின் கரத்தில் உள்ள சங்கு போன்றது. முகமும் கண்களும் தாமரை மலர்கள் போன்றன; பல்லுக்கு முத்தும் நிலவின் துண்டும் உவமைகள்; குனித்த புருவம் வளைந்த வில் போன்றது; நெற்றி எட்டாம்நாள் சந்திரன் போன்றது; நடைக்கு எருதும் யானையும் உவமை” என்றான்.

இராமன் உருவை இவ்வருணைனைகளால் அனுமன் காட்டினான்.

அவனுடைய ஒவ்வொரு சொல்லும் அமுதத் துளிகளாய் அவள் செவிகளில் நிறைந்தன; தேன் துளிகளாய் இனித்தன.

“உன் அமுத மொழிகள் என் மனத்தை வருக்கி விட்டன. என் உயிரைத் தளிர்ப்பச் செய்து விட்டாய்; வாழ்க நீ” என்று வாழ்த்தினாள்.