பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர காண்டம்

251



“காட்சிக்குச் சான்று தந்த நீ சாட்சி வேறு யாதாவது கூற முடியுமா” என்று கேட்டாள்.

இராமனுக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த சுவை யான அனுபவங்கள் சில அனுமனிடம் தெரிவிக்கப் பட்டன. அவற்றுள் இரண்டனை அவன் எடுத்துரைத்தான்.

நாட்டைவிட்டுக் காட்டுக்குச் சென்றபோது, அயோத்தியின் மதிலைக் கடக்கும் முன்பு, “காட்டை அடைந்து விட்டோமா?” என்று கேட்ட சீதையின் குழந்தைத்தனத்தை நினைவுப்படுத்தினான்.

சுமந்திரனிடம் பூவையையும் கிள்ளையையும். கவனித்துக் கொள்ளும்படி தங்கையர்க்குச் சொல்லி அனுப்பிய அன்புச் செய்தியை அறிவித்தான்.

கூற்றுகளால் அவளை நம்ப வைத்த அனுமன், உறுதி தரும் அடையாளம் ஒன்றனையும் அவள் முன் நீட்டினான். இராமன் கை விரலை அழகுபடுத்திய மோதிரமாய் அது இருத்தலைக் கண்டாள்; அதை அன்புடன் வாங்கிக் கொண்டாள்; வஞ்சகர் நாட்டுக்கு வந்ததால் அது மாசு பட்டுவிட்டதே என்று கூறி கண்ணிரால் அதனைக் குளிப்பாட்டினாள்.

அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை; செத்தவர் உயிர் பெற்றது போலவும், இழந்த மாணிக்கத்தைப் பெற்ற நாகத்தைப் போலவும், விழி பெற்ற குருடனைப் போலவும், பிள்ளையப் பெற்ற மலடியைப் போலவும் அவள் விளங்கினாள்.