பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

கம்பராமாயணம்


களை எதிர்த்துப் பேசினான்; “முள்ளைக் களை வதற்குக் கைநகம்போதும்; கோடரி தேவை இல்லை” என்றான்; “தான் ஒருவனே தக்க படை கொண்டு அவர்களைத் தாக்கிப் பாடம் கற்பிக்க முடியும்” என்றான்.

அறச் செல்வனாகிய வீடணன், அறிவு நிரம்பிய கருத்துகளைச் சொல்லினான். “சுட்டது கூன் உடைய குரங்கு அன்று; மிதிலை வந்த சனகன் மகள்” என்றான்; “சீதை கற்பு” எரிமலையாகும்; நெறி திறம்பியவரை அது சுட்டு எரிக்கவல்லது” என்று கூறினான்.

“ஆணவத்தால் அறிவு இழந்த இரணியன் எப்படி அழிந்தான்? யாரால் ஒழிந்தான்? பெற்ற மகனே அவனுக்குப் பெரும்பகைஞன் ஆனான்; “உன்னோடு உடன் பிறந்தவன் என்பதால் நீ செய்யும் கொடுமை களுக்கு எல்லாம் நான் துணைபோக வேண்டும், என்று எதிர் பார்த்தால் அது கற்பனை ஆகும்”.

“தவற்றைத் திருத்திக்கொள். பைந்தொடியாள் சீதை அவளை விட்டுவிடு; பெண்பாவம் பொல்லாதது; வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டு நீ வேதனைப்படுவதில் பொருளே இல்லை”.

“இரணியனைக் கொன்றது யார் தெரியுமா? பாற்கடலில் துயிலும் பரமன்தான்; அவன் துயில் எழுந்து துரயோர் துயர்துடைக்கப் பிறந்துள்ளான்; பகை பெரிது; மானுடரால் நீ சாகப் போகிறாய்; நீ கேட்ட வரத்தில் செய்த