பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

287



இருவரும் தழுவிக் கொண்டனர்; அன்பின் பிணைப்பு அவர்களை அணைத்தது.

சொற்கள் வேறு இடை புகாமல் கட்டளை மட்டும் கால் கொண்டது.

“வானரச் சேனையும் மானிடர் இருவரும் நகரைச் சுற்றினார்” என்றான் இராவணன்.

“ஏன்?” என்று அவன் கேள்வி எழுப்பவில்லை.

“கொற்றமும் உற்றனர்” என்று முடித்தான்.

“நான் என்ன செய்ய வேண்டும்?” என்ற வினாவை அவன் எழுப்பவில்லை; இராவணனும் காத்திருக்க வில்லை.

“அவர் இன்னுயிரை அழித்து அவர்களைப் போனகம் செய்” என்றான்.

தூக்கத்தின் இனிமையை அப்பொழுதுதான் பதின்மடங்காக உணர்ந்தான்; பார்க்கத் தகாதவற்றைப் பார்க்கத் தேவை இல்லை; கேட்கத் தகாவதற்றைக் கேட்கத் தேவை இல்லை.

“சீதை சிறைப்பட்டாள்; அவள் இன்னும் விடுதலை பெறவில்லையோ?” என்றான்.

“மூண்டதோ பெரும்போர்?” என்று அதிர்ச்சியோடு கூறினான்.

“சீதையை இன்னும் விடுதலை செய்யவில்லை” என்பது அவனுக்கு வருத்தத்தைக் தந்தது.