பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

295



கடும்போர் நடந்தது. கும்பகருணன் சுக்கிரீவனை வான்வழியே தூக்கிச் செல்ல முனைந்தான். அவனைத் தடுக்க இராமன் அம்புகள் விட்டுச் சரகூடம் அமைத்தான்; இராமன் விட்ட அம்பு கும்ப கருணன் நெற்றியில் பாய்ந்தது; குருதி கொட்டியது; அவன் கைப்பிடி தளர்ந்தது; குருதி சுக்கிரீவன் முகத்தில் பட்டதால், அவன் மயக்கம் தீர்ந்து, கும்பகருணனின் மூக்கையும் செவியையும் கடித்து எடுத்துக்கொண்டு வந்துவிட்டான்.

தொடர்ந்து நடந்த போரில், இராமன் விட்ட அம்புகளால் கும்பகருணன் கைகளும் கால்களும் இழந்து அரை மனிதன் ஆனான். இராமன் அம்புபட்ட வேதனை யால் அவனோடு எந்த வம்பும் யாரும் வைத்துக் கொள்ள முடியாது, என்ற முடிவுக்கு வந்தான் கும்பகருணன்.

“இராமன் வில்தொழிலுக்கு ஆயிரம் இராவணர் வந்து எதிர்த்தாலும் சமம் ஆகார்; இனி இராவணன் உயிர் பிழைக்க மாட்டான்” என்ற முடிவுக்கு வந்தான்.

காலனும் அஞ்சும் கும்பகருணனுக்கு முடிவு காலம் நெருங்கியது; உயிர்விடுமுன் தம்பிக்கு அருள் செய்யுமாறு இராமனை வேண்டி நின்றான்.

“நீதியால் வந்த நெறி அல்லால் சாதியால் வந்த நெறி அவன் அறியான் என் தம்பி; அவன் உன்னை அடைக்கலமாய் அடைந்திருக்கிறான்; படைக்கலம் உடைய இராவணன் கையில் இவன் அகப்பட்டால்; “உயிர்வேறு உடல் வேறு” என்று ஆக்கிவிடுவான்; அவனைக் காப்பது உன் கடமை; இந்த வரத்தை யான் வேண்டுகிறேன்”.