பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

கம்பராமாயணம்



“மூக்கிலா முகம்” என்று என்னை நோக்கி முனிவர்களும் தேவர்களும் இகழ்வர்; அதனால் என் தலையை உன் அம்பால் அறுத்துக் கடலில் போக்குவாய்” என்று கேட்டுக் கொண்டான்.

இராமன் அம்பு தொடுத்தான்; அவன் தலைமட்டும் தனியே அறுந்து அலை நிரம்பிய கடலுள் ஆழ்ந்து மறைந்தது; அதுவே அவனுக்குச் செய்த ஈமக் கடனும் ஆனது.

ராவணன் தீரா ஆசை

போர்க்களத்துக்குத் தம்பி கும்பகருணனை அனுப்பிய இராவணன் முடிவுக்குக் காத்திராமல் தன்காதல் நோய்க்கு விடிவு காண விழைந்தான்; போரில் இராமனை வெல்வது என்பதைவிடக் காதலில் சீதையை அடைவது தான் அவனுக்கு முக்கியமாய்ப் பட்டது. அதற்கு வழிதேடி மகோதரனை அறிவுரை கேட்டான்.

அரக்கருள் ஒருவனாகிய மருத்துவன் என்பவனை சனகனாய் உருவெடுத்து வரும்படி பணித்தான்; அவனை அடுத்து வரும்படி இராவணன் கூறிவிட்டு, அமுதின் அனைய அழகியை நாடிச் சென்றான்.

“குமுதம் போன்ற இதழ்களை உடையவளே! நீ தான் எனக்கு உயிர் தர வேண்டும்; உன் அடைக்கலம் நான்” என்று சொல்லிப் பழைய பாட்டைப் பாடினான்; தனக்கு இணங்குமாறு வேண்டினான்; அவள் துவண்டு, அவனை வெகுண்டு வெறுத்து ஒதுக்கினாள்.

நாடகம் தொடங்கியது; சனகன் வடிவில் வந்த அரக்கன் தன் உரையாடலைத் தொடங்கினான்.