பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

305



உருவச் சிலையினை உருவாக்கி; அவர்களை வலையில் மாட்டுவது’ என்று தீர்மானித்தான்; அவ்வாறே அவ்வுருவை உருவாக்கினான். அதன் கூந்தலைப் பற்றி இழுத்து வந்து அனுமன்முன் நிறுத்தி அவனைப் பதற வைத்தான் இந்திரசித்து. “பாவி மகளே! நீ வந்துதானே அரக்கர் ஆவியை அழித்தாய், என் தந்தையை மயக்கி, அவரையும் அழிக்கத் தொடங்கினாய்” என்று கூறி அவ்வுருவத்தைத் தன்வாளால் தடிந்தான்; குருதி கொட்டியது” ‘அவள் சீதையே’ என்று தவறாய் நினைத்தான் அனுமன், துடித்து அழுதான்.

“இது முன்னுரை; பின்னுரை ஒன்று உள்ளது” என்றான் இந்திரசித்து.

“'அயோத்திக்குச் சென்று தம்பி பரதனையும் தாயர் மூவரையும் இதேபோல வெட்டி மாய்க்கப் போகிறேன்” என்று கூறி, அனுமன் காணும்படி அயோத்தி நோக்கி வடதிசை பறந்தான்.

இந்த அதிர்ச்சி தரும் செய்தியும், அஞ்சத்தக்க நிகழ்ச்சிகளும் அனுமனை அலைத்தன; அவனை நிலைகொள்ளச் செய்யவில்லை; தலைவனைக் கண்டு பேசிப் பகைவர் உயிர்களுக்கு உலைவைக்க ஓடினான்; மலை குலைந்தாலும் நிலை குலையாத மன்னன் மகன் மனக்குழப்பத்தில் ஆழ்ந்தான்; ‘இது உண்மை’ என்று கருதி இடரில் விழுந்தான். அரக்கர் மாயைகளை அறிந்த வீடணன், உண்மை அறிய, வண்டு வடிவம் கொண்டு சென்று சீதையைக் கண்டு வந்தான்.