பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

309



பெற்றவன்; மூவர்களை நடுங்க வைத்தவன்; தேவர்களை ஏவல் கொண்டவன்; களம் பல கண்டவன்; கார் வண்ணனைக் கடும்போரில் நேருக்குநேர் சந்தித்தான்.

இராமன் கூரிய அம்புகள் கம்பன் சொற்களைப் போல, இராவணன் மார்பில் ஆழப்பதிந்தன; தேரும் கொடியும் உடன்கட்டை ஏறின; தோல்வி, முகவரி தேடி முன்வந்து நின்றது; அவதாரப் பணி நிறைவேறிற்று; அரக்கரை அழித்து, அறத்தை நிலை நாட்டினான் இராமன்.

அறம் வென்றது; பாவம் தோற்றது.

இறுதி அவலம்

இராவணன் பரு உடல், பார்மீது கிடந்தது; அவன் ஆருயிர் அனைய மனைவி மண்டோதரி, அவன் உடல்மீது விழுந்து படிந்து, புரண்டு அழுதாள்.

“எள் இருக்கும் இடமும் இன்றிச் சீதையைக் கரந்த காதல் உள்ளிருக்குமோ என்று தடவியதோ இராமன் வாளி” என்று கதறி அழுதாள்.

“வெள்எருக்கஞ் சடைமுடியான் வெற்புஎடுத்த
திருமேனி மேலும்கீழும்
எள்இருக்கும் இடன்இன்றி உயிர் இருக்கும்
இடன்நாடி இழைத்த வாறோ?
கள்இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள்இருக்கும் எனக்கருதி உடல்புகுந்து
தடவியதோ? ஒருவன் வாளி”