பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

கம்பராமாயணம்



என்று கேட்டுக் கொண்டனர். “ஆணவம் மிக்க அவனை அவன் சொல்லாலேயே அழிக்க வேண்டும்” என்று திட்டமிட்டு, வாமனனாய் அவதரித்து, மூன்று அடி மண் கேட்டு, விண்ணையும் மண்ணையும் அளந்து, மூன்றாம் அடியை அவன் தலைமேல் வைத்து, அவனைப் பாதளத்தில் அழுத்தினார். இந்தக் கதையை அவ் இளம் சிறுவர்க்கு வளம்மிக்க தவம் உடைய முனிவர் எடுத்து உரைத்தார்.

மாவலி ஆண்ட மண் அது; அவன் மாண்டதும் அதே மண்தான்; அதனால் அந்த இடம் பெருமை பெற்றது என்பதைவிட வாமனனாய் வந்து, நெடு மாலாய் நிமிர்ந்து நின்ற இடம் அது; அதனால் அது சிறப்புப் பெற்றது. திருமாலின் திருவடி தீண்டப் பெற்றதால் அந்த இடம் ‘திவ்வியத் தலம்’ ஆயிற்று. அந்த இடத்துக்குச் ‘சித்தாசிரமம்’ என்ற பெயர் வழங்கலாயிற்று. “நினைத்த பொருள் கைகூடும் இயல்பினது” என்ற பொருளில் இந்த இடத்துக்கு இப் பெயர் அமைந்தது.

வேதம் கற்ற அந்தணர், வேள்விகள் இயற்றுவதைத் தம் தொழிலாகக் கொண்டிருந்தனர். தீ வளர்த்து, அவிசு சொரிந்து, தேவர்களுக்கு உணவு தந்தனர்; அவர்கள் புகழ்மிக்க இந்தத் திருத்தலத்தைத் தாம் யாகம் செய்யும் பூமியாகத் தேர்ந்து எடுத்தனர்; அதனால், அங்கே ஆசிரமங்கள் அமைத்துக் கொண்டு வேதம் ஓதுவதும் வேள்விகள் இயற்றுவதும் தம் தொழிலாகக் கொண்டனர்; விசுவாமித்திரரும் தாம் மேற்கொண்ட தவத்துக்குரிய இடமாக அந்த இடத்தைத் தேர்ந்து எடுத்தார்; அங்கு வந்திருந்த ஏனைய வேதியர்களும் முனிவர்களும் அவர் தலைமையை ஏற்று அடிபணிந்தனர். வந்தவர்களை