பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலகாண்டம்

55



“யார் இந்தக் காளையர்? அம் முனிவரோடு ஏன் வந்தனர்?” என்று கேட்டுத் தெரிந்து கொள்ள விழைந்தான் சனகன். ஏன் அவர்களைப் பற்றி இவன் விசாரிக்க வேண்டும்? மகளைத் தருவதற்கு அவன் அடி போடுகிறான் என்பதை அறிந்து கொண்டார் விசுவா மித்திரர். இராமன் குலப் பெருமையையும், அவன் நலங்களையும் விவரித்தார். “அவர்கள் கோசல நாட்டு மன்னன் தசரதன் அரும் புதல்வர்கள்” என்று தொடங்கி அவர்கள் தமக்காக வனத்துக்கு வந்து அரக்கர்களை விரட்டியதையும், செய்த வீரச் செயல்களையும் விளக்கமாக உரைத்தார்.

திருமணம்

“குலமும் நலமும் பேரழகும் ஆற்றலும் மிக்க இராமன், சீதையை மணக்கத் தக்கவன்” என்று சனகன் முடிவு செய்தான். எனினும், அவளை மணக்க அவனே வைத்த தேர்வு அவனுக்குக் குறுக்கே நின்றது; மூலையில் மலைபோல் வில் ஒன்று கிடப்பது நினைவுக்கு வந்தது. அது ஒரு தடைக்கல் ஆக இருக்குமோ? என்று கவலையுற்றான்; அவனே சீதையைச் சுற்றி ஒரு முள்வேலியை அமைத்து விட்டான். அதனை அவனே எப்படி அகற்ற முடியும்?

“வில்லை வளைத்தே இராமன் அவளை மணக்க வேண்டும்” என்று முடிவு செய்தான். அதற்கு முன்னர்ச் சீதையின் பிறப்பு. அவள் வளர்ப்பு இவற்றைப் பற்றி அறிவிக்க விரும்பினான். அந்த வில்லின் வரலாற்றையும் தெரிவிக்க விரும்பினான். அவன் குறிப்பறிந்து