பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலகாண்டம்

59



இராமன் தம்பி இலக்குவனைக் கண்டு வியந்து பேசினர்; “தம்பியைப் பாருங்கள்” என்று சுட்டிக் காட்டினர்; அந்த நகருக்கு இவர்களை அழைத்து வந்த அருந்தவ முனிவராகிய விசுவாமித்திரருக்கு நன்றி நவின்றனர்.

திருமணம் உறுதி செய்யப்பட்டது. தசரதனுக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது. இராமன் வில்லை முறித்த வெற்றிச் செய்தியையும், அவன் வேல் விழியாளை மணக்க இருக்கும் மங்கலச் செய்தியையும் கேட்டுத் தசரதனே பெருமிதமும் மகிழ்ச்சியும் கொண்டான்; நாற்பெருஞ்சேனையும், அரும்பெரும் சுற்றமும், தம் அன்பு மனைவியரும், இராமன் பின்பிறந்த தம்பியரும் அறிவுடை அமைச்சர்களும், ஆன்றமைந்த சான்றோன் ஆகிய வசிட்டரும் புடைசூழ மிதிலை மாநகரை வந்து அடைந்தான்.

மன்னர் வீற்றிருந்த மணி மண்டபத்தில் மடமயிலை மகளாய்ப் பெற்ற மாமன்னன் சனகன் வந்து அமர்ந்தான்; கோல அழகியாகிய கோமகளை அழைத்துவரச் சேடியரை அனுப்பினான். மணக் கோலத்தில் வந்த மாணலம் மிக்க பேரழகி தந்தையின் அருகில் அமர்ந்து, அம் மண்டபத்திற்குப் பெருமை சேர்த்தாள்.

சீதையைப் பாராட்டினர்

பொன்னின் ஒளியும், பூவின் பொலிவும், தேனின் சுவையும், சந்தனத்தின் குளிர்ச்சியும், தென்றலின் மென்மையும், நிலவின் ஒளியும் ஒருங்கு பெற்ற அவள், அன்னநடையைத் தன் நடையில் காட்டினாள்; மின்னல்