பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலகாண்டம்

65



நாட்கள் சில நகர்ந்தன; வந்தவர் அனைவரும் தத்தம் நாடு நோக்கித் திரும்பினர். மிதிலை மகளின் மதிலைக் கடப்பதற்குத் துணையாக இருந்த தவ முனிவர் விசுவாமித்திரரும் தம் கடமை முடிந்துவிட்டது என்று கூறி விடை பெற்று நடைகட்டினார், வடபுலத்து இருந்த இமயம் நோக்கி; இமயமலைச் சாரல் அவர் தங்கித் தவம் செய்யும் தவப் பள்ளியாயிற்று. எல்லாம் இனிமையாய் முடிந்தன.

பரசுராமர் வருகை

பண்புமிக்க பாரத நாட்டில் துன்பம் இழைக்கும் சாதிப் பிரிவுகள் இல்லாமல் இல்லை. அந்தணர் ஞானத்திலும், வேத சாத்திரம் கற்பதிலும் விற்பன்னராய்த் திகழ்ந்தனர். நூல்கள் பல கற்றதோடு நுண்ணறிவு மிக்கவராக இவர்கள் விளங்கினர். தவசிகள் என்போர் பெரும்பாலும் அந்தணரே. இவர்கள் ஞானத் தலைவர்களாய் மதிக்கப்பட்டனர்.

அரசர்கள் நாட்டு ஆட்சித் தலைவர்களாய் இருந்தனர்; இவர்களைச் சத்திரியர் என்றனர். இவர்கள் போர் செய்து, பகைவர் தொல்லைகளிலிருந்து நாட்டு எல்லைகளைக் காத்தனர். அமைதியான வாழ்வுக்கு அரணாய் விளங்கினர். வலிமை மிக்கவர்களாய் விளங்கியதால் இவர்களை மக்கள், தலைவர்களாய் ஏற்றுக் கொண்டனர். தவசிகளை ஞானத்தலைவர் என மதித்தனர். அவர்களுள்ளும் ஒரு சிலர் மாவீரர்களாய்த் திகழ்ந்தனர். அவர்களுள் ஒருவன் பரசுராமன் என்பவன்.

அவன் சமதக்கனி முனிவர் மகன்; அம் முனிவரைக் காத்த வீரியார்ச்சுனன் என்ற அரசன் கொன்றுவிட்டான்.