பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

87



அவனை வந்து அடையச் சடங்குகளைச் செய்தனர். வெள்ளை நிறப் புல்லில் கள்ளமில்லாத கார்வண்ணனை அமர வைத்தனர்; அப்புல்லிற்குத் தருப்பை புல் எனப் பெயரிட்டனர்.

மணநாளுக்கு முந்தியதினம் வழக்கமாக இயற்றும் சடங்குகளைச் செய்தனர். ஒரே நாளில் விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் பரபரப்பாய் நடந்து முடிந்தன. அடுத்த நாள் நடக்க இருக்கும் முடிசூட்டும் விழாவைப் பற்றிய செய்திகள் இறக்கைகள் கொண்டு பறந்தன; நாடறியச் செய்தனர் அயோத்தி மாநகர் இந்திரன் பொன்னகர் எனப் பொலிவு பெற்றது. திக்கு எட்டும் செய்தி பரவியது; திசைகள் எட்டிலும் இருந்து மக்களும் மன்னரும் வந்து குழுமினர்; வள்ளுவன் என்னும் செய்தி பரப்புவோன் யானை மீது ஏறி ஊரறியச் செய்தான்.

“இராமன் நாளையே முடி சூடுகிறான்” என்ற செய்தியைப் பரப்பினான்; மக்கள் களிப்பில் மூழ்கினர். வாழை மரங்கள் இடம்பெயர்ந்தன, கமுக மரங்கள் அழகு செய்தன; முத்துமாலைகள் ஒளி வீசின, பொற்குடங்கள் பொலிவு ஊட்டின.

மந்தரை குறுக்கீடு

ஊரே உவகையுள் ஆழ்ந்தது; மலர்ந்த பூக்களைக் காண முடிந்ததே அன்றிக் குவிந்த மலர் ஒன்றுகூட இல்லை; ஒரே ஒரு ஜீவன் மட்டும் புழுக்கத்தால் மனம் அழுங்கிக் கொண்டது. அவள் முதுகு கூனிக் குறுகி இருந்தது. அந்த ஊனம் அவள் மனத்திலும் ஏற்பட்டது.