பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

கம்பராமாயணம்



“மணிமுடி” என்றதும் “யாருக்கு?” என்ற வினாவை எழுப்பினாள்.

“இராமனுக்கு; அவன் இந்நாட்டுக் கோமகன்!” என்றனர்.

உண்டை வில்லால் இராமன் சிறுவயதில் தன் முதுகைக் குறிபார்த்து அடித்த பண்டைய நிகழ்ச்சி ஒன்று அவள் நினைவிற்கு வந்தது. “ கிறுக்கனுக்கா இந்தத் தருக்கு மிக்க வாழ்க்கை?” என்று அழுக்காறு கொண்டாள்.

கேகயன் மகள் அவளுக்கு மிகவும் வேண்டியவள்; அவள் தோழிகளில் இவள் மிகவும் நெருங்கியவள்; மனம் சுருங்கிய இவள், அவள் மருங்கு சென்றாள். காய்ச்சிய பாலில் ஒரு புரைத்துளி கலந்தால் அது தயிராகிறது; இனிப்பு புளிப்பாக மாறுகிறது. ‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்பது அவளுக்குத் தெரியும். பெண் மனம் என்பது என்ன என்பதை நன்கு அறிந்தவள். ‘மகனுக்காகக் கட்டிய கணவனை உருட்டிவிடுபவள் பெண்’ என்பதை அறிந்தவள்; கணவன் துணை; மகன் அவள் உயிர்; பாசம்; கணவன் இறந்த காலம்; மகன் எதிர்காலம். பழமையை நினைத்துத் தன் கிழமையை உதறித் தள்ளமாட்டாள். தாய்மை என்பது பெண்ணின் பெருமை; ஆனால் அதுவே அவள் வீழ்ச்சிக்குத் துணைமை என்பதையும் உணர்ந்தவள். ‘பாசம்’ என்பது நெஞ்சைப் பசையற்றதாக ஆக்க வல்லது” என்பதை அவள் அறிவாள்; பாரம்பரியப் பற்று வாரிசு நியமனம் மாமேதைகளுக்கும் வீழ்ச்சியைத் தரும் என்பதை அவள் அறிவாள்.