பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

93



தொல்லைகளைத் தேடுகிறாய். அக்கம் பக்கத்தில் யாராவது நீ பேசுவது கேட்டு அறிந்தால், உன்னை அக்குவேறு ஆணிவேறாய்ப் பிய்த்துவிடுவர்; சூழ்ச்சி செய்கிறோம் என்று மன்னன் ஆள்கள் நம்மை வளைத்துக் கொள்வர்; அதனால், விளையும் விளைவுகளை நினைத்துப் பார்! மனம் போன போக்கில் உன் சிந்தனைகளைச் சிதறவிடுகிறாய்” என்று அறிவிப்புத் தந்தாள்.

“அஞ்சுகமே! உன் சுகம் கருதியே பேசுகிறேன்; நீ அரசன் ஆணைக்கு அஞ்சுகிறாய்; இன்னும் எதுவும் மிஞ்சிப் போகவில்லை.”

“பாவம்! பரதன் பரிதவிப்புக்கு ஆளாகிறான்; அவன் செய்த குற்றம் உன் வயிற்றில் பிறந்தமையே; அதுதான் பெரிய குற்றம்.”

“அரசன் மாள, மற்றொருவன் நாடாள முடியும்; அவன் உயிரோடு இருக்க இராமன் ஆட்சிக்கு வருதல் முறையாகாது; மூத்தவன் தசரதன் இருக்கும்போது முன்னவன் என்று கூறிக் கொண்டு இவன் முடி ஏந்துவது தவறு அல்லவா?”

“காலம் கருதித் தக்கது செய்தால், ஞாலமும் கை கூடும்; இதை நன்கு பயன்படுத்திக் கொண்டவள் கோசலை; அரசனை அவள் மயக்கிவிட்டாள்; அவனை முடுக்கிவிட்டிருக்கிறாள்; இல்லாவிட்டால் தீடீர் என்று ஏன் அவன் இந்த முடிவுக்கு அடிவைக்க வேண்டும்? நான் படித்துச் சொல்கிறேன்; நீ மனம் இடிந்து அழியப் போகிறாய்.”