பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

95



பகட்டை விடு; காசுக்கு உதவாதவர் கலகலப்புக் காட்டுகிறார்கள். சுகாசினியாக இருக்க வேண்டிய நீ, விகாசினியாய் இருக்கிறாய். அந்தப் புரத்து அழகி உன்னை எந்தப் புரமும் வளராமல் தடுத்துவிட்டான்; இட்டமகிஷி என்றால் பட்டமகிஷியாக ஏன் ஆகக் கூடாது?”

“கொஞ்சிக்குலவ உன்னை வஞ்சிக்கொடி என்றான்; நீ வஞ்சித்து அவனுக்கு அது உண்மை என்பதைக் காட்டு”.

“அழகி என்கிறான்; மனம் இளகிவிட்டாய்; இளயவள் என்றான்; வளைந்து கொடுத்தாய்; தாய்மை என்றால் அது அவனுக்குச் சேய்மையாகிவிட்டது. நீ பரதன் தாய் என்பதை அவன் தட்டிக்கழித்துவிட்டான்.

“இனி உன் தாய்மை பேசட்டும்; பரதன் வாழட்டும்; உனக்கு இழைத்த அநீதி ஒழியட்டும்; சொன்ன சொல் ஆற்றட்டும்” என்றாள்.

“என்னடி உனக்கு இந்த வேகம்?” என்றாள் கைகேயி

“அது என் விவேகம்; அவனிடம் உன் பிடிவாதம் காட்டு; உன் பிடியில் அவனை மாட்டு; சிறந்த தாய் என்பதை நீ அவனுக்கு எடுத்துக் காட்டு; இது இராமனுக்கு நான் வைக்கும் அதிர்வேட்டு” என்றாள்.

“நாவை அடக்கு உன் போக்கு நீக்கு: அக்கம் பக்கம் அறிந்தால் உன்னை மொட்டை அடித்து முழுக் காட்டிவிடுவர்” என்று அச்சுறுத்தினாள்.

“அதற்கு வேறு ஆளைப்பாரு, அஞ்சுவது நான் அல்ல; உன் நலம் தான் எனக்குப் பெரிது” என்றாள்.