பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கம்பர்



பரதன் நாடாள வேண்டும்; இராமன் சடைக் கோலம் - தவக்கோலம் பூண்டு பதினான்கு ஆண்டுகள் காடேக வேண்டும்; இஃது அரசன் ஆணை என்று கைகேயி இராமனுக்குச் சொல்லும் இடம் இது. 'இயம்பினன் அரசன் என்றாள்' என்பது இப்பாடலில் உள்ள பாடம். 'ஏவினன் அரசன் என்றாள்' எனவும் ஒரு பாடம் உள்ளது. இயம்பினன் என்பது சரியா? ஏவினன் என்பது சரியா? தீர்மானிப்பது எப்படி? எத்தனை சுவடிகளில் இயம்பினன் என்பது வந்துள்ளது, ஏவினன் என்பது வந்துள்ளது என்று இலக்கியவுலகிற்குக் குடியரசு முறையைப் பின்பற்றலாமா?

இப்பாடலில் தயரதன் கைகேயி இராமன் என்ற மூன்று பாத்திரங்கள் உள. இவைகளின் தன்மைகள் என்ன? கம்பர் எங்ஙனம் தன்மைப்படுத்துகின்றார் என்று காண வேண்டும். இன்ன பாத்திரம் இன்ன சொல்லைச் சொல்லும், சொல்லுதற்கு உரியது என்ற தெளிவு வேண்டும். இராமனுக்கு முடி சூட்டுவது பற்றி அமைச்சர்களைக் கலந்த தயரதன் மந்திரி சபைக்குத் திடீரென இராமனை அழைத்து வரச் செய்கின்றான். வந்த மைந்தனைத் தழுவிய தயரதன், 'மறுக்காத மகனைப் பெற்ற தந்தை எவனோ அவனே துன்பம் இல்லாதவன்' ('சொல்மறா மகற்பெற்றவர் அருந்துயர் துறந்தார்') என்று ஒரு நீதியைக் கூறிவிட்டு, நீ முடிபுனைந்து நல்லறஞ் செய்க, எனக்கு நீ செய்ய வேண்டிய கடன் இது என்று வேண்டுகிறான்.

தாதை யப்பரி சுரைசெயத்
தாமரைக் கண்ணன்
காதல் உற்றிலன் இகழ்ந்திலன்
கடனிதென் றுணர்ந்தும்
யாது கொற்றவன் ஏவிய
ததுசெயலன்றோ
நீதி யெற்கென நினைந்துமப்
பணிதலை நின்றான்.

மகன் செய்யவேண்டிய உதவி இது என்று தந்தை நிலையிலிருந்து வேண்டினான் தயரதன். பெரும்பாரத்தை மன்னன் என்மேல் சுமத்துகிறான் என எண்ணிவிடாதே எனவும், உன்பால்நான் பெறவேண்டிய நன்மை இது எனவும் தாழ்ந்து - சொல்லுகின்றான் தயரதன். 'தாதை அப்பரிசு உரை செய' என்ற தொடரால் தயரதன் மன்னன் நிலையிலிருந்து பேசவில்லை என்பது வெளிப்படுகின்றது. ஆனால் இராமன் இங்குத் தயரதனை என்ன நிலையிற் காண்கின்றான்? அமைச்சர்கள் சுற்றியிருக்கும் மந்திர இருக்கை யல்லவா இந்த இடம்! அமைச்சன் சுமந்திரன் அல்லவா