பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 17 3. அகலிகைப் படலம் விசுவாமித்திரரும் தனது வேள்வியை முடித்து அரச குமாரர்களுடன் புறப்பட்டுப் பல இடங்களைத் தாண்டி கங்கைக் கரைக்கு வந்து சேர்ந்தனர். கங்கையைப் பற்றிக் குறிப்பிடும் போது இங்கு கம்பர் தனது காவிரியை மறக்காமல் பொன்னியைப் பொருவும கங்கை எனக் குறிப்பிடுகிறார். காவிரியைப் போன்ற கங்கை என்பது அதன் பொருளாகும். அப்புனித கங்கையைப் பணிந்து வணங்கி விட்டு மிதிலை நோக்கிச் சென்று அந்நகரின் கோட்டை மதிலின் வெளிப்புறத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு மனையின் மாட்சியை அழித்து இழி வெய்திய கெளதம முனிவரின் மனைவியான அகலிகை கல்லாகியுள்ள மேட்டிற்கு வந்தனர். அதனருகில் சென்ற போது இராமனுடைய கால் துகள் பட்டுக் கல்லாகியிருந்த அகலிகை உயிர் பெற்றுப் பழைய வடிவத்துடன் எழுந்தாள். இந்தக் கதையைக் கம்பன் மிக நுட்பமாகத் தனது காவியத்தில் குறிப்பிடுகிறார். 'இனைய நாட்டினில் இனிது சென்று, இஞ்சி சூழ் மிதிலை புனையும் நீள் கொடிப்புரிசையின் புறத்து வந்து இறுத்தார் மனையின் மாட்சியை அழித்து இழி மாதவன் பன்னி கனையும் மேட்டுயர் கருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டனர்” என்று கம்பர் கூறுகிறார். கெளதம முனிவர் அவருடைய மனைவி அகலிகை, அவள் மிக்க அழகானவள். அவள் மீது தேவர் கோனான இந்திரன் மையல் கொண்டான். முனிவர் ஆசிரமத்தில் இல்லாத போது அம்முனிவன் வேடம் தரித்து ஆசிரமத்திற்குள்ளே போய் அகலிகையைத் தழுவினான். அகலிகையோ தனது நிலையிழந்து காம உணர்வில் மயங்கி வந்தவனைத் தழுவி, அவன் தனது கணவனல்ல இந்திரன் தான் எனத் தெரிந்தும் மெளனமாக இருந்து விட்டாள். அந்த நேரத்தில் முனிவன் தனது ஆசிரமத்திற்குத் திரும்பிவர அவரைக் கண்டதும் இந்திரன் பூனையுருக் கொண்டு தப்பியோட முயன்றான். அதைக் கண்ட கெளதமன் நடந்ததை உணர்ந்து இந்திரனுக்கு அவனது உடம்பில் ஆயிரம் மாதர்க்குள்ள அறிகுறிகள் உண்டாகும்படி சபித்தும் அகலிகையைக் கல்லாகும் படியும் சாபம் விடுத்தான்.